ஹர்சித் ராணாவுக்கு மன அழுத்தம் ஏற்படலாம்.. பிசிசிஐக்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை
மும்பை: இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஹர்ஷித் ரானா தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு வருவது அவருக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார். எனினும் பிசிசிஐ-யின் செயல் திறன் மையத்தின் முறையான அனுமதி பெற்ற பின்னரே வீரர்கள் அணிக்குத் திரும்புகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டில் தசைநார் மற்றும் இதர காயங்களால் ஹர்ஷித் ரானா தொடர்ச்சியான பின்னடைவைச் சந்தித்துள்ளார். இதனால், அவர் அவசர அவசரமாக மீண்டும் போட்டிகளுக்குள் கொண்டு வரப்படுகிறாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், முறையான உடற்தகுதிச் சான்றிதழ் பெறாமல் எந்த ஒரு வீரரையும் அணி நிர்வாகம் அவசரமாகக் களம் இறக்குவதில்லை என்று கூறி சரண்தீப் சிங் அணி நிர்வாகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய டெல்லி ரஞ்சி அணி பயிற்சியாளர் சரண்தீப் சிங் "அணி நிர்வாகம் யாரையும் அவசரப்படுத்துவதில்லை. நீங்கள் பிசிசிஐ-யின் செயல் திறன் மையத்தில் இருக்கும்போது, அங்குள்ள உடற்பயிற்சி நிபுணர்கள் உங்களுக்கு உடற்தகுதிச் சான்றிதழ் அளித்தால் மட்டுமே அடுத்தகட்டமாகத் தேர்வு குறித்து பரிசீலிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி போட்டியின் போது ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக ரானா 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரை தவறவிட்டார். அதற்கு அறுவை சிகிச்சையும் தேவைப்பட்டது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் 2026 தொடரிலும் அவர் விளையாடவில்லை. பின்னர், ஜூன் மாதம் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பினார்.
எனினும், அவரது வருகை நீண்ட காலம் நீடிக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது, டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அவருக்கு தொடைப்பகுதி தசைநார் காயம் ஏற்பட்டது. இதனால் எஞ்சிய டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து அவர் விலக வேண்டியிருந்தது.
அதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் ரானா சேர்க்கப்பட்டார். ஆனால், செப்டம்பர் 7 அன்று நடந்த பயிற்சி ஆட்டத்தின் போது பந்துவீசும்போது அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் ஆப்கானிஸ்தான் டி20 தொடர் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஆகிய இரண்டிலிருந்தும் அவர் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக விதர்பா வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
24 வயதான ஹர்ஷித் ரானாவின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய சரண்தீப், "இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்த பிறகு வீரர்கள் கூடுதல் முயற்சி எடுக்க விரும்புவது இயல்பு, அப்போது மீண்டும் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொடர்ந்து காயங்கள் ஏற்படுவதால் ஹர்ஷித் ரானா மனமுடைந்து போயிருக்கக் கூடும்."
"ஏனெனில் இது அவர்களுக்குள் ஒருவித மன அழுத்தத்தை உருவாக்கும். ரானா தற்போது இந்திய அணியின் மிக முக்கியமான உறுப்பினர். அவரால் பந்துவீசவும் பேட்டிங் செய்யவும் முடியும். கடந்த ஓராண்டாக அவர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் அணிக்குத் திரும்புவார் என நம்புகிறோம்" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications


