ரிஷப் பண்ட்-ஐ காப்பாற்றியவர்களுக்கு பரிசு.. ஹரியானா அரசு கொடுத்த கவுரவம் என்ன??.. யார் அவர்கள்?
ரூர்கி: கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்-ன் உயிரை விபத்தில் இருந்து காப்பாற்றிய இரண்டு பேருக்கு ஹரியானா மாநில அரசு சன்மானம் வழங்கி கவுரவித்துள்ளது. அவர்கள் ரிஷப் பண்ட் யாரென்றே தெரியாமல் மனித தன்மையுடன் உயிரை காப்பாற்றியதாக நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உத்தர்காண்ட்-ல் இருந்து டெல்லி வரை சென்றுக் கொண்டிருந்த ரிஷப் பண்ட்-ன் கார் விபத்தில் சிக்கியது. தூக்க கலக்கத்தில் வாகனத்தை ஓட்டிய போது, சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.
இதனையடுத்து படுகாயங்களுடன் இருந்த ரிஷப் பண்ட், டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உயர் சிகிச்சைக்காக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்.

பண்ட்-ஐ காப்பாற்றியவர்கள்
இது ஒருபுறம் இருக்க, ரிஷப் பண்ட்-ன் உயிரை காப்பாற்றியது யார் எனத்தெரியவந்துள்ளது. ஹரியானாவை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் சுஷில் மான் மற்றும் நடத்துநர் பரம்ஜித் சிங் ஆகியோர் வழக்கம் போல பணியில் இருந்துள்ளனர். அப்போது தீப்பற்றி காரில் சிக்கியிருந்த பண்ட்-ஐ மீட்டு, போர்வைகளை கொடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பரிசு
இந்நிலையில் அவர்களை ஹரியானா போக்குவரத்து துறை சார்பில் கவுரவித்துள்ளது. பணிகளை முடித்துவிட்டு பணிமனைக்கு திரும்பிய அவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், கோப்பைகளையும் கொடுத்து கவுரவித்துள்ளது. இதே போல மாநில அரசு சார்பில் விரைவில் அவர்களுக்கு சன்மானம் வழங்க ஏற்பாடு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து எப்படி ஆனது
இதுகுறித்து பேசிய அவர்கள், ரிஷப் பண்ட் யாரென்றே எங்களுக்கு தெரியாது. ஒரு உயிர் போகக்கூடாது எனும் எண்ணத்தில் தான் செயல்பட்டோம். அவரை காரில் இருந்து மீட்ட உடனே, போலீசாருக்கும், ஆம்புலன்ஸுக்கும் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தோம். அதுவரை அவர் பதற்றம் இன்றி இருக்க வேண்டும் என்பதற்காக போர்வையை உடுத்தி வைத்திருந்தோம் எனக் கூறியுள்ளனர்.

லக்ஷ்மண் பாராட்டு
இது ஒருபுறம் இருக்க, தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் வி.வி.எஸ். லக்ஷ்மண் இவர்களுக்கு நன்றி கூறியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பேருந்து ஓட்டுனர் சுஷில் குமார் சுயநலம் இன்றி செய்த இந்த உதவி மிகப்பெரியதாகும். உங்களுக்கு நாங்கள் மிகப்பெரும் கடமைப்பட்டுள்ளோம். மறக்க முடியாத உதவி என்பது போல பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications