சொங்கியாக ஆடியதால் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்ட "வருங்கால அமெரிக்க ஜனாதிபதி" கோஹ்லி!
துபாய்: முத்தரப்புத் தொடரில் மோசமாக ஆடி, ரன் குவிக்கத் தவறியதால் ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான வீரர்கள் தரவரிசையில் விராத் கோஹ்லி 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். கோஹ்லியின் 2வது இடத்தை தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா பிடித்துள்ளார்.
முத்தரப்புத் தொடரில் நான்கு போட்டிகளில் ஆடிய கோஹ்லி வெறும் 24 ரன்களே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு போட்டியில் கூட அவர் உருப்படியாக ஆடவில்லை. இந்தியாவும் இந்தத் தொடரில் ஒரு போட்டியில் கூட வெல்லாமல் மண்ணைக் கவ்வியது.
கோஹ்லியின் மோசமான பார்ம் காரணமாக இதுவரை தரவரிசைப் பட்டியலில் 2வது இடத்தில் இருந்து வந்த அவர் 3வது இடத்திற்குப் போய் விட்டார்.
2வது இடத்தை ஆம்லா பிடித்துள்ளார். ஆம்லா, நடந்து முடிந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அசத்தலாக ஆடியிருந்தார். 2 சதம், 2 அரை சதம் என மொத்தம் 413 ரன்களை அவர் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாறி மாறிப் போட்டி
தற்கால கிரிக்கெட் வீரர்களில் கோஹ்லிக்கும், ஆம்லாவுக்கும்தான் சாதனை படைப்பதில் மாறி மாறி போட்டி நடந்து வருகிறது என்பது இங்கு கூடுதல் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

முதலிடத்தில் வில்லியர்ஸ்
பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் ஏப் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் தொடருகிறார்.

தவான் - டோணி
இந்தப் பட்டியலில் மேலும் இரு இந்தியர்கள் உள்ளனர். ஷிகர் தவான் 7வது இடத்திலும் கேப்டன் டோணி 8வது இடத்திலும் உள்ளனர். ரோஹித் சர்மா 13வது இடத்தில் இருக்கிறார்.

பந்து வீச்சாளர்களில் இந்தியா பரிதாபம்
பந்து வீச்சாளர்களில் டாப் 10 பட்டியலில் ஒரு இந்தியர் கூட இல்லை. இதிலிருந்தே இந்தியா எந்த அளவுக்கு ஓட்டை உடைசல் ஈயம் பித்தாளை பேரீச்சம்பழ பவுலர்களை வைத்துளளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

13வது இடத்தில் புவனேஷ் குமார்
13வது இடத்தில் புவனேஷ் குமார் இருக்கிறார். பந்து வீச்சாளர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல்தான் முதலிடத்தில் உள்ளார். ஆனால் இவரை ஐசிசி பந்து வீச தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டாப் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியல்:
ஏப் டிவி்லியர்ஸ், ஆம்லா, விராத் கோஹ்லி, குமார சங்கக்கரா, திலகரத்னே தில்ஷன், கனே வில்லியம்சன், ஷிகர் தவான், டோணி, குவின்டன் டி காக்

ஜார்ஜ் பெய்லி
டாப் 10 பவுலர்கள் பட்டியல்:
சயீத் அஜ்மல், சுனில் நரீன், டேல் ஸ்டெயின், ஜேம்ஸ் ஆண்டர்சன், மிட்சல் ஜான்சன், ஷகிப் அல் ஹசன், மிட்சல் ஸ்டார்க், முகம்மது ஹபீஸ், ரங்கன ஹெரத், மார்னி மார்க்கல்.


Click it and Unblock the Notifications