3 போட்டிகள் கொண்ட தொடர்
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, அந்த அணியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் மோதவுள்ளது. இந்நிலையில், ஜோஹன்ஸ்பர்க்கின் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச டி20 தொடரின் முதல் போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆட்டநாயகனாக தேர்வு
இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் ஆஷ்டன் அகர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதலில் பேட்டிங்கில் 20 ரன்களை குவித்த அவர், பௌலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், 24 ரன்களை மட்டுமே கொடுத்து மொத்தமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் அவர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தன்னம்பிக்கை உயர்வதாக பேட்டி
இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வான ஆஷ்டன் அகர், போட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், தன்னுடைய மனம்கவர்ந்த இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குறித்து மனம்திறந்தார். அவரது ஆட்டத்தை பார்க்கும்போதெல்லாம் தனக்குள் தன்னம்பிக்கை அதிகரிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த உலகிலேயே தனக்கு பிடித்த வீரர் அவர் என்றும் கூறியுள்ளார்.
ஜடேஜாவுடன் பேசிய ஆஷ்டன்
கடந்த இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான சர்வதேச ஒருநாள் தொடரின்போது, தன்னுடைய மனம்கவர்ந்த ரவீந்திர ஜடேஜாவுடன் தான் பேசியதாக கூறிய ஆஷ்டன் அகர், அவரிடமிருந்து பல்வேறு விஷயங்களை தான் பெற்றதாகவும் இதன்மூலம் தனக்கு அதிக ஊக்கம் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.
பாராட்டு தெரிவித்த ஆஷ்டன்
ஜடேஜாவுடன் பேசும்போது, அவர் தொடர்ந்து ஸ்பின் பந்துகளை போட முயற்சிப்பதாக கூறியதாக தெரிவித்த ஆஷ்டன், மேலும் பேட்டிங் செய்யும்போது, மிகுந்த உற்சாகத்துடனும் பீல்டிங் செய்யும்போதும் சிறப்பாகவும் அவர் செயல்படுவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். ஜடேஜாவை பார்க்கும்போது தனக்குள் தன்னம்பிக்கை ஊற்றெடுப்பதாகவும் ஆஷ்டன் கூறினார்.
தொடரை கைப்பற்ற ஆஸி. முனைப்பு
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான சர்வதேச டி20 தொடரின் இரண்டாவது போட்டி போர்ட் எலிசபெத்தின் செயிண்ட் ஜார்ஜ் பார்க்கில் இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற ஆஸ்திரேலியா தீவிரமாக உள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றிபெற தென்னாப்பிரிக்காவும் முனைப்புடன் உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.