அந்த 4 பேர் மட்டும் வாங்க.. டிராவிட்டின் மாஸ்டர் ப்ளான்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்த புதுவித முயற்சி!
நாக்பூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் மாஸ்டர் ப்ளான் என்னவென்பது கசிந்துள்ளது. அணி வீரர்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்யுமாறு ராகுல் டிராவிட் அறிவுரை கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து ஆஷஸ் தொடரை விட இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் மீதான மவுசும், பரபரப்பும் ஏகபோகத்திற்கு உள்ளன.
4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 9ம் தேதி தொடங்கவுள்ள சூழலில் 10 நாட்களுக்கு முன்பு இருந்தே இதுகுறித்த பேச்சுக்கள் தொடங்கிவிட்டன. அதுவும் கடைசி பார்டர் கவாஸ்கர் கோப்பை என்பதால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு உள்ளது.

ஆஸ்திரேலிய டெஸ்ட்
இந்திய அணியை பொறுத்தவரையில் இந்த தொடரை வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள இந்தியா இந்த தொடரை 2 - 0 அல்லது 3 - 1 என்ற புள்ளிக்கணக்கில் வென்றால் மட்டுமே இறுதி சுற்றுக்கு செல்ல முடியும். இந்த முறையாவது ஐசிசி கோப்பையை வென்றுவிட வேண்டும் என முனைப்புடன் உள்ளது.

இந்தியாவின் பிரச்சினை
இந்தியாவுக்கு இந்த முறை நிச்சயம் ஆஸ்திரேலிய ஸ்பின்னர்கள் தடையாக இருப்பார்கள். ஏனென்றால் இம்முறை பயிற்சி போட்டியே வேண்டாம் எனக்கூறிவிட்டு, புதுவித முயற்சியை கையில் எடுத்துள்ளனர். சிட்னியில் இந்தியாவில் உள்ளதை போன்றே ஸ்பின்னருக்கு உதவக்கூடிய பிட்ச்-ஐ தயார் செய்து பவுலிங் பயிற்சி செய்தார்கள். அந்த பிட்ச்- தார் ரோட்டை போல ஏகபோகத்திற்கு ஸ்பின் ஆனது. இதே போல இந்தியா வந்த பிறகு பெங்களூருவிலும் இதே போன்ற பிட்ச்-ஐ ஏற்படுத்தி பயிற்சி பெற்றார்கள்.

டிராவிட் மாஸ்டர் ப்ளான்
இப்படிப்பட்ட சூழலில் தான் ஆஸ்திரேலியாவை சமாளிக்க ராகுல் டிராவிட் மாஸ்டர் ப்ளான் போட்டுள்ளார். அதாவது ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், சுப்மன் கில் ஆகிய 4 பேரையும் தனியாக அழைத்துப்பேசிய டிராவிட், ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுப்பாட்டம் ஆடக்கூடாது என்றும், அதிரடியான அணுகுமுறை மட்டுமே செய்யுங்கள் எனக்கூறியுள்ளார்.

ஸ்வீப் ஷாட் பயிற்சி
இதற்காக இந்த 4 வீரர்களுக்கு ஸ்பெஷலாக ஸ்வீப் ஷாட் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்திய களங்களில் ஸ்பின்னர்களுக்கு எதிராக ரன் குவிக்க ஸ்வீப் ஷாட் மட்டுமே உதவியாக இருக்கும். அதுவும் தரையோடு தான் அடிக்க வேண்டும். இந்த ஷாட்டிற்கான திட்டத்தில் மட்டும் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். ஏனென்றால் இவர்கள் இருவரும் இயற்கையாகவே ஸ்வீப் ஆடக்கூடியவர்கள்.

விராட் கோலிக்கு சரிவருமா?
டிராவிட் தேர்வு செய்துள்ள 4 வீரர்களில் 3 பேர் அதிரடிக்கு பழக்கப்பட்டவர்கள் தான். ஆனால் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ஆடும் கோலிக்கு இந்த அணுகுமுறை எப்படி சரிவரும் என்பது குழப்பமாக உள்ளது. ஸ்பின்னர்களுக்கு எதிராக சற்று தடுமாறி வரும் கோலி இப்படி செய்தாலாவது அதில் இருந்து மீண்டும் வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications