பிர்மிங்காம்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டம் மழையால் நீண்ட நேரம் தாமதமானது. அதனால் முக்கியமான ஐந்தாம் நாள் ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்பட்டது. இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்குத் தொடங்க வேண்டிய ஆட்டம், மைதானத்தில் பெய்த தொடர் மழையால் திட்டமிட்ட நேரத்தில் தொடங்கவில்லை. சுமார் 1.30 மணி நேரம் தாமதமாக துவங்கியது.
முதல் நான்கு நாள் ஆட்டமும் மழை இன்றி முழுமையாக நடைபெற்ற நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பிருந்தே மழை பெய்து வந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஐந்தாவது நாள் ஆட்டத்தில் 536 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் உள்ளது. அந்த அணியிடம் 7 விக்கெட்டுகள் கைவசம் உள்ளன.

மறுபுறம், இந்திய அணி அந்த ஏழு விக்கெட்டுகளையும் வீழ்த்தினால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் உள்ளது. இந்திய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. மறுபுறம், இங்கிலாந்து அணி இந்தப் போட்டியை டிரா செய்ய முயற்சிக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இதற்கிடையே தான் மழை பெய்தது. மழை நின்ற பிறகு போட்டி மீண்டும் துவங்கியது.
பின்னர் மழையின் காரணமாக தாமதமான நேரத்தை கணக்கில் கொண்டு 10 ஓவர்கள் குறைக்கப்பட்டு ஐந்தாம் நாள்ஆட்டத்திற்கு 80 ஓவர்கள் வழங்கப்பட்டது. இங்கிலாந்து அணி இந்தப் போட்டியை டிரா செய்வதற்கு மழையால் ஏற்பட்ட ஓவர் இழப்பு உதவும். அதே சமயம், மழை பெய்தால் பிட்ச்சின் தன்மை மாறும். அது வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும். இது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கிறது. எனவே, மழையால் இந்தப் போட்டியின் முடிவில் நிச்சயம் ஏதேனும் மாற்றம் இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.
முன்னதாக இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 587 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி 407 ரன்கள் எடுத்தது. அப்போது 180 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 427 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் என்ற பெரிய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி நான்காம் நாள் முடிவில் 72 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இருக்கிறது.