வாட்சனில் பாதி.. ராயுடுவில் மீதி.. இங்கிலாந்து பவுலர்களை கதற வைத்த கிளாஸன்.. இத்தனை சாதனைகளா!
மும்பை: உலகக்கோப்பை தொடரில் குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் கிளாஸன் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.

உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர், எங்களை டிஃபெண்டிங் சாம்பியன்ஸ் என்று அழைக்காதீர்கள். பெயரில் கூட டிஃபென்ஸ் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. இம்முறையும் இங்கிலாந்து அணி அட்டாக்கிங் பாணியிலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று கூறினார்.
இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் எந்த நேரத்தில் வாயை வைத்தாரோ தெரியவில்லை. இங்கிலாந்து அணியை தான் அனைத்து அணிகளும் ஒவ்வொரு போட்டிகளிலும் அட்டாக் செய்து வருகின்றனர். முதல் போட்டியிலேயே ரச்சின் ரவீந்திரா செய்த சம்பவம் ஒருபக்கம் இருக்க, அதபின் ஆஃப்கானிஸ்தான் அணி டெல்லியில் வைத்து மொத்தமாக முடித்து கட்டியது.
இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்காக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இன்று களமிறங்கியது. டாஸ் வென்ற பின் மும்பை மைதானத்தை பற்றி அறிந்தும் சேஸிங்கை எடுத்தார் பட்லர். இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 6 ரன் ரேட்டில் ரன் குவித்து வந்தாலும், கிளாஸன் களமிறங்கிய பின் ரன் ரேட் கொஞ்சம் கொஞ்சமாக உயரத் தொடங்கியது.

41வது முடிவில் 40 பந்துகளில் அரைசதம் கடந்த கிளாஸன், அதன்பின் ருத்ரதாண்டவம் ஆட தொடங்கினார். 148 கிமீ வேகத்தில் மார்க் வுட் வீசிய பந்தை அதனை விட வேகமாக சிக்சருக்கு அனுப்பி வைத்தார் கிளாஸன். ஒவ்வொரு ஓவரிலும் என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே இங்கிலாந்து பவுலர்கள் பந்துவீசியதை கண்கூடாக உணர முடிந்தது. ஒவ்வொரு ஓவருக்கும் அடித்த சிக்சர்களால், வெறும் 61 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா வீரர்கள் அடிக்கும் 5வது சதம் இதுவாகும். 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் படைத்த சாதனை, தற்போது 5 சதங்கள் அடித்ததன் மூலம் சமன் செய்யப்பட்டுள்ளது. சிறப்பாக ஆடிய கிளாஸன் 61 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம் உலகக்கோப்பை தொடரில் குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர்கள் பட்டியலில் 6வது இடம் பிடித்துள்ளார். வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்துவீச்சாளர்களை விளாசுவதன் மூலம் இவர் வாட்சன், ராயுடு போன்றவர்களின் ஸ்டைலில் விளையாடுவதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications