என்ன கொடுமை.. நாலு வருஷத்துல நாறிப் போச்சே யுவராஜ் சிங்கின் பொழப்பு!
மும்பை: கடந்த உலக கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்ததற்காக, தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்ற யுவராஜ்சிங்கிற்கு 2015 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் தராமல் புறக்கணித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.
2011ம் ஆண்டு நடைபெற்ற பத்தாவது, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின. போட்டியை நடத்திய நாடே, கோப்பையை வென்றதில்லை என்ற வரலாறை மாற்றிய இந்தியா, இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

பேட்டிங், பவுலிங்கில் சாதனை
டோணி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல முதுகெலும்பாய் இருந்தவர் வேறுயாருமல்ல ஆல்ரவுண்டர் யுவராஜ்சிங். அந்த உலக கோப்பை தொடரில். 6 லீக் ஆட்டங்கள், காலிறுதி, அரையிறுதி, இறுதி ஆட்டம் என மொத்தம் 9 ஆட்டங்களில் விளையாடிய யுவராஜ்சிங், மொத்தம் 362 ரன்கள் குவித்தார். தனது மாயாஜால சுழல் பந்து மூலம், 15 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

தொடர் நாயகன் யுவராஜ்சிங்
அந்த உலக கோப்பையின் தொடர்நாயகன் விருதையும் யுவராஜ் தட்டிச் சென்றார். இலங்கைக்கு எதிரான, இறுதி ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 21 ரன்கள் எடுத்து களத்தில் நின்றதுடன், 2 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியிருந்தார். உலக கோப்பை தொடர் ஒன்றில் 300க்கு மேல் ரன்கள் எடுத்து, 15 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஒரே வீரர் யுவராஜ்சிங்தான்.

மூன்று சதம் போட்டும் கண்டுக்கவில்லை
ஆனால், 2015 உலக கோப்பைக்கான அணியில் யுவராஜ்சிங்கை தேர்வு செய்யாமல் புறக்கணித்துள்ளது பிசிசிஐ. ஸ்டூவர் பின்னியை விடவா யுவராஜ்சிங் சிறந்த வீரர் கிடையாது என்ற கூக்குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன. இத்தனைக்கும், நடைபெற்றுவரும் ரஞ்சி கோப்பை தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடும் யுவராஜ்சிங் அடுத்தடுத்து 3 செஞ்சுரிகளை விளாசி, தனது பராக்கிரமத்தை பறைசாற்றியுள்ளார்.

டோணிக்கு விருப்பமில்லை?
யுவராஜ் பக்கம் பிசிசிஐ திரும்பி பார்க்காததற்கு கேப்டன் டோணியின் நெருக்கடியும் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

4 பேருக்கு மட்டுமே..
நடப்பு சாம்பியனான இந்திய அணியில் கடந்த உலக கோப்பையில் விளையாடிய 4 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உலக கோப்பையில் விளையாடிய அனுபவம் இல்லாத வீரர்கள், இதுபோன்ற பெரிய போட்டித் தொடர் ஒன்றில் முதல் முறையாக களம் காணும்போது, இயல்பாக பதற்றம் ஏற்பட கூடும். எனவே அனுபவசாலிகளுக்கு அதிக வாய்ப்பு தருவது வழக்கம்.

அனுபவம் இல்லையே..
ஆனால் பிசிசிஐ ஏனோ, அனுபவசாலிகளை கழற்றிவிட்டு, புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. அதில் பலரும் அன்னிய மண்ணில் அதிகம் விளையாடி அனுபவம் இல்லாதவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications