
2வது வெற்றிகரமான துரத்தல்
ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இது 2வது வெற்றிகரமான துரத்தல் வெற்றியாகும். இதற்கு முன்பு 2006ம் ஆண்டு ஆஸ்திரேலியா குவித்த 435 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கை தென் ஆப்பிரிக்கா அணி 438 என்ற கணக்கில் துரத்தி வென்றதே உலக சாதனையாகும்.

பவுண்டரிகளைக் குவித்த இந்தியா
இந்திய அணி நேற்றைய போட்டியில் மொத்தம் 39 பவுண்டரிகளைக் குவித்தது. ஆஸ்திரேலியர்களின் பங்கு 36 ஆகும்.

சிக்ஸர் மழை...
இரு அணிகளின் சார்பில் நேற்று மொத்தம் 23 சிக்ஸர்கள் விளாசப்பட்டன. இதில் ஆஸ்திரேலியாவின் பங்கு 12, இந்தியாவின் பங்கு 11.

ஆஸ்திரேலியாவுக்கு பெய்லி...
ஆஸ்திரேலிய அணியில் ஜார்ஜ் பெய்லி 92 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதை அவர் 50 பந்துகளில் எடுத்தார்.

இந்தியாவுக்கு ரோஹித் சர்மா
இந்திய அணியில் நேற்று விளாசித் தள்ளியவர் ரோஹித் சர்மாதான். 123 பந்துகளைச் சந்தித்த அவர் ஆட்டமிழக்காமல் 141 ரன்களைக் குவித்தார்.

கலக்கல் கோஹ்லி
ஆனால் நேற்றைய ஆட்டத்தின் ஸ்டார் விராத் கோஹ்லிதான். 52 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் சரியாக 100 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடக்கம்.

விக்கெட்டில் வினய் குமார் முன்னிலை
இந்திய வீரர் வினய் குமார் 9 ஓவர்களில் 2 விக்கெட்களைச் சாய்த்தார். ஆஸ்திரேலியா வீரர் பால்க்னருக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.

இந்தியாவுக்கு 2வது சிறப்பான துரத்தல்
இந்தியாவைப் பொறுத்தவரை இது 2வது சிறப்பான துரத்தல் வெற்றியாகும்.

ஆளுக்கு ஒரு வெற்றி
7 போட்டிகள் கொண்ட தற்போது சமமாகியுள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றிருந்தது. தற்போது நாம் வென்றுள்ளோம். 3வது போட்டி அக்டோபர் 19ம் தேதி மொஹாலியில் நடைபெறவுள்ளது.

அட..ஆஸிக்கு. இப்படியும் ஒரு பெருமையப்பா...
உலக அளவில் டாப் 4 வெற்றிகரமான துரத்தல்களில் வீழ்ந்த அணியாக ஆஸ்திரேலியா தற்போது உருவெடுத்திருப்பது ஆச்சரியமான ஒரு விஷயமாகும்.

இதற்கு முன்பு பாகிஸ்தான்...
இந்தியா இதற்கு முன்பு பாகிஸ்தான் அணியை 2012ம் ஆண்டு 4 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்து வீழ்த்தியதே பெரிய அளவிலான துரத்தல் வெற்றியாக இருந்தது. தற்போது அதை தாண்டியுள்ளது.

மொத்தம் 721 ரன்கள்
நேற்றைய போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 721 ரன்களைக் குவித்தன. இது ஒரு நாள் போட்டி வரலாற்றில் நான்காவது பெரிய ரன் குவிப்பாகும்.

இந்தியாவி்ன் அதிரடி செஞ்சூரியன் கோஹ்லி
நேற்றைய சதம் மூலம் அதி வேகத்தில் சதம் கண்ட இந்தியராக உருவெடுத்தார் கோஹ்லி. இதற்கு முன்பு 60 பந்துகளில் ஷேவாக் கண்ட சதமே அதிகபட்சமாக இருந்தது.

7வது அதி வேக சதம்
மேலும் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதி வேகமாக போடப்பட்ட 7வது சதமாகும் இது.

கோஹ்லிக்கு 16வது சதம்
கோஹ்லிக்கு இது 16வது ஒரு நாள் போட்டி சதமாகும்.

ரோஹித்துக்கு இதுதான் பெஸ்ட்
ரோஹித் சர்மாவைப் பொறுத்தவரை அவரது ஒரு நாள் சிறந்த ரன் குவிப்பு இதுதான்.

2010க்குப் பிறகு முதல் சதம்
மேலும் 2010ம் ஆண்டுக்குப் பின்னர் ரோஹித் சர்மா போட்ட முதல் சதம் இதுதான். இந்த சதத்தை எட்ட அவர் 59 போட்டிகள் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

104 போட்டிகளில் 3வது சதம்
இதுவரை 104 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள சர்மாவுக்கு இது 3வது சதம். அதேசமயம், தொடக்க ஆட்டக்காரராக இது அவருக்கு முதல் சதம்.

5 ரன்னில் போச்சே.. ஷிகர் கவலை
இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவனும் நேற்று மிரட்டினார். ஆனால் 95 ரன்களில் அவரை அவுட்டாக்கி விட்டனர். 5 ரன்களில் அவர் ஒரு சதத்தைத் தவற விட்டார்.

ஷிகரும், சர்மாவும் சேர்ந்து 176
ஷிகரும், ரோஹித் சர்மாவும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 176 ரன்களைக் குவித்தனர்.

ரோஹித்தும், கோஹ்லியும் சேர்ந்து 186
அதேபோல ரோஹித்தும், கோஹ்லியும் சேர்ந்து 186 ரன்களைக் குவித்து ஆஸ்திரேலியர்களை முடக்கிப் போட்டனர்.

ஆஸ்திரேலியாவுக்கு பெரிய ஸ்கோர்தான்
நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா குவித்த 359 ரன்கள் என்பது, இந்தியாவில் அந்த அணி இதுவரை எடுத்த ஸ்கோர்களிலேயே பெரிதாகும். அதேபோல ஜெய்ப்பூரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரும் இதுதான்.

இந்தியாவுக்கு எதிராக 3வது முறையாக
இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா பெரிய ஸ்கோரை எட்டியது இது 3வது முறையாகும்.

5 பேருக்கு ஆளுக்கு ஒரு ஆப்...
நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவின் அரோன் பின்ச், பிலிப் ஹூக்ஸ், ஷான் வாட்சன், ஜார்ஜ் பெய்லி, கிளென் மேக்ஸ்வெல் ஆகிய ஐவரும் அரை சதம் போட்டனர்.

இது உலக சாதனை
ஒரு அணியின் முதல் ஐந்து வீரர்களும் அரை சதம் போட்டது இதுவே முதல் முறையாகும். எனவே இது உலக சாதனையாகும் அமைந்தது.

ஜடேஜா சார்.. ஏன்.... இப்படி
ரவீந்திர ஜடேஜா நேற்று நிறைய ரன்களைக் கொடுத்து விட்டார். 10 ஓவர் வீசிய அவர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தாமல் 72 ரன்களைக் கொடுத்து விட்டார்.

கடைசி 10 ஓவரில் 122 ரன்கள்
ஆஸ்திரேலிய அணி கடைசி 10 ஓவர்களில் 122 ரன்களைக் குவித்து இந்திய பந்து வீச்சை தவிடு பொடியாக்கி விட்டது.
மொத்த்ததில் நேற்று நாம் பேட்டிங் மூலம்தான் வென்றுள்ளோம்.. பவுலிங்கால் அல்ல என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.


Click it and Unblock the Notifications











