செயின்ட் லூசியா கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு டேரன் சமியின் பெயர்!
காஸ்ட்ரிஸ், செயின்ட் லூசியா: மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் டேரன் சமிக்கு ஒரு புதிய கெளரவம் கிடைத்துள்ளது. மேற்கு இந்தியத் தீவுகளில் ஒன்றான செயின்ட் லூசியாவில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு சமியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்தியாவில் நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மிகச் சிறப்பாக அணியை வழி நடத்தியதாலும், கோப்பையை வென்று பெருமை தேடிக் கொடுத்ததாலும் சமியின் பெயரைச் சூட்டி அவரைக் கெளரவிக்க செயின்ட் லூசியா அரசு முடிவு செய்துள்ளது.
லூசியா அரசின் இந்த முடிவு குறித்து சமி மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

லூசியாக்காரர்
சமி லூசியாவைச் சேர்ந்தவர்தான். அதேபோல இன்னொரு லூசியாக்காரர் ஜான்சன் சார்லஸ். இருவரும் நேற்று ஹவனோர்ரா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியபோது அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. செயின்ட் லூசியா பிரதமர் கென்னி அந்தோணி நேரில் வந்து இருவரையும் வரவேற்றார்.

மாபெரும் வரவேற்பு
இதுகுறித்து பின்னர் தனது பேஸ்புக் பக்கத்தில் சமி கூறுகையில் மிகப் பெரிய வரவேற்பு, வீட்டுக்கு வந்தாச்சு என்று கூறி வீடியோவையும் போட்டுள்ளார்.

என் பெயரில் மைதானம்
மேலும் அவர் கூறுகையில், இங்குள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு எனது பெயர் சூட்டப்படுவதாக பிரதமர் கூறியுள்ளார். மகிழ்ச்சியாக இருக்கிறது பெருமையாக உணர்கிறேன். நன்றிகள். எல்லாப் புகழும் கடவுளுக்கே என்று கூறியுள்ளார் சமி.

நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்
நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். கெளரவமாக உணர்கிறேன். அனைவருக்கும் நன்றி. செயின்ட் லூசியா மக்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. அவர்களுக்கு எனது அன்புகள் என்று கூறியுள்ளார் சமி.

சார்லஸுக்கும் கெளரவம்
இந்த ஸ்டேடியத்தின் ஒரு ஸ்டாண்டுக்கு சார்லஸ் பெயர் சூட்டப்படும் என்றும் செயின்ட் லூசியா அரசு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications