
ஸ்டீவ் ஸ்மித்தின் ஆஸி அணி
2017ஆம் ஆண்டு ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா இரண்டு இன்னிங்க்ஸ்களில் 260, 285 ரன்கள் குவித்தது. இந்தியா 105 மற்றும் 107 ரன்கள் குவித்து படுமோசமான டெஸ்ட் போட்டி தோல்வியை சந்தித்தது.

ஆஸி. மிதப்பில் இருந்தது
333 ரன்கள் வித்தியாசத்திலான அந்த தோல்விக்கு முக்கிய காரணம் போட்டி நடந்த புனே பிட்ச் தான். ஆனாலும், ஆஸ்திரேலிய அணி இந்தியாவை தங்கள் கட்டுக்குள் வைத்துள்ளதாக எண்ணி மிதப்பில் இருந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அப்படியே எண்ணியது.

இரண்டாவது டெஸ்ட் லியோன் கலக்கல்
இரண்டாவது டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்றது முதல் நாள் ஆடுகளம் முற்றிலும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. இந்திய அணியில் ராகுல் மட்டுமே போராடி 90 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் நாதன் லியோன் 8 விக்கெட்கள் சாய்த்தார்.

கிண்டல் செய்த ஆஸி. வீரர்
இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இரண்டாம் நாள் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த போது ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை. அப்போது அஸ்வின் பந்துவீச்சை சந்தித்த ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் மாட் ரென்ஷா பந்து சரியாக பிட்ச் ஆகாததை கண்டு கிண்டல் செய்வது போல சிரித்தார்.

அஸ்வின் சாபம்
அப்போது விக்கெட் கிடைக்காத விரக்தியில் இருந்த அஸ்வின் கோபம் அடைந்தார். அப்போது அஸ்வின், நீங்கள் இப்போதே தடுப்பாட்டம் ஆடாமல், ரன் அடித்துக் கொள்ளுங்கள். இரண்டாவது இன்னிங்க்ஸில் உங்களால் 100 ராம் கூட எடுக்க முடியாது என சாபம் விடுவது போல கத்தினார். ஆனால், கிட்டத்தட்ட அதே தான் நடந்தது.

ஆஸ்திரேலியா ரன் குவிப்பு
அஸ்வின் இப்படி கோபப்பட்டாலும் முதல் இன்னிங்க்ஸில் ரென்ஷா 60, ஷான் மார்ஷ் 66 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலியா 276 ரன்கள் குவித்து 87 ரன்கள் முன்னிலை பெற்றது. அடுத்து இரண்டாம் இன்னிங்க்ஸில் 120 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது தவித்தது.

பொறுமையை சோதித்த புஜாரா
அப்போது புஜாரா - அஜின்க்யா ரஹானே பேட்டிங் செய்து வந்தனர். அப்போதே தாங்கள் வெற்றி பெற்று விட்டதாக எண்ணிய ஆஸ்திரேலிய வீரர்கள் புஜாராவை தொடர்ந்து சீண்டி வந்தனர். ஆனால், புஜாரா வழக்கம் போல எதையும் கண்டு கொள்ளாமல் ரன்னே அடிக்காமல் ஆஸ்திரேலிய அணியின் பொறுமையை சோதித்தார்.

எளிய இலக்கு
ரஹானே 52, புஜாரா 92 ரன்கள் சேர்க்க இந்திய அணி அந்த மோசமான பிட்ச்சில் 274 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணிக்கு கடைசி இன்னிங்க்ஸில் 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

வாக்கு உண்மை ஆனது
ஆனால், அஸ்வின் வாக்கு உண்மை ஆனது. நான்காம் நாளில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியால் அந்த பிட்ச்சில் சுழற் பந்துவீச்சை சுத்தமாக சமாளிக்க முடியவில்லை. அஸ்வின் 6 விக்கெட்கள் வீழ்த்த, ஆஸ்திரேலிய அணி 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அதிர்ச்சி அளித்த இந்தியா
இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா மூன்று நாட்கள் ஆதிக்கம் செலுத்தினாலும் இந்தியா கடைசியில் 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அதிர்ச்சி அளித்தது. அப்போது தான் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்திய மண்ணில் டெஸ்ட் ஆடுவது அத்தனை சுலபமில்லை என உணர்ந்தது.

தொடரில் வென்ற இந்தியா
அந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி டிரா ஆனது. நான்காவது போட்டியில் இந்தியா வெற்றி பெற, டெஸ்ட் தொடரை இந்தியா 2 - 1 என கைப்பற்றி அசத்தியது. இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் தொடர் வெற்றிகளில் ஒன்றாக அந்த தொடர் அமைந்தது.


Click it and Unblock the Notifications











