அஸ்வின், மின்னல் வேகத்தில் 300 விக்கெட் வீழ்த்தி சாதித்தது எப்படி?
நாக்பூர்: இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் அவர் 300 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியுள்ளார்.
இதுதான் ஐசிசி டெஸ்ட் போட்டியில் ஒருவர் மிகவேகமாக எடுத்த 300 விக்கெட் ஆகும். ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் டென்னிஸ் லில்லி 56 போட்டிகளில் விளையாடி 300 விக்கெட்டுகள் எடுத்த சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
அஸ்வின் இன்று நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் சேர்த்து இதுவரை 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை படைத்து இருக்கிறார்.

ஸ்டெம்ப் பறந்தது
அஸ்வின் முதல் இன்னிங்ஸில் எடுத்த முதல் விக்கெட்டே 'சிறந்த சம்பவமாக' இருந்தது. இலங்கை வீரர் திரிமன்னேவை குழப்பி பந்தை உள்ளே வீசி லெக் ஸ்டெம்பை காலி செய்தார். அஸ்வின் கிட்டத்தட்ட பல நாட்களுக்கு பின் எடுத்த விக்கெட் இதுதான். அவரது கொண்டாட்டத்தில் கூட பழைய அஸ்வின் போல இல்லாமல் ஒரு முதிர்ச்சி இருந்தது. ஷணன்காவை அவுட் செய்த அவரது இரண்டாவது விக்கெட்டிலும் இதேபோல ஆஃப் ஸ்டம்ப் பறந்தது.

உடனடி ரிவ்யூ
இதேபோல அவர் சண்டிமாலுக்கு போட்ட பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகியும் அம்பயர் விக்கெட் கொடுக்கவில்லை. ஆனால் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் உடனடியாக கோஹ்லியிடம் ரிவ்யூ கேட்க சொன்னார் அஸ்வின். டோணி எப்படியோ அதேபோல ரிவ்யூவில் மிகவும் கவனமாக இருந்தார் அஸ்வின். 10 வது பேட்ஸ்மேன் அஸ்வின் பந்தில் கேட்ச் கொடுக்க முதல் இன்னிங்சில் 4 விக்கெட் எடுத்து இலங்கைக்கு 'சுபம்' போட்டார் அஸ்வின்.

இவ்வளவு ரன்னா
இரண்டாவது இன்னிங்சில் அஸ்வினுக்கு செல்ப் எடுக்க கொஞ்சம் நேரமானது. எல்லாரும் விக்கெட் எடுத்த போது தலைவர் தனியாக ஒரே ஓவரில் 20 ரன்கள் வரை கொடுத்தார். ஆனால் மனம் தளராத அஸ்வின் அதே ஓவரில் சிக்ஸ் அடித்த அதே ஷணன்காவை விக்கெட் எடுத்தார். ராகுல் கேட்ச் பிடித்தவிட்டு அஸ்வினை பார்த்து நாக்கை துருத்தியபடியே வந்தார். ஆனாலும் மற்ற பிளேயர்களும் விக்கெட் எடுத்ததால் இவர் 8 விக்கெட் எடுக்க வாய்ப்பு இல்லாத மாதிரிதான் இருந்தது.

வெற்றி.. வெற்றி
இரண்டாவது இன்னிங்ஸில் முதல் ஐந்து விக்கெட் வரை அஸ்வின் எந்த விக்கெட்டுமே எடுக்கவில்லை. அதன்பின்தான் வரிசையாக விக்கெட் எடுத்தார். மிடில் ஆர்டர் மொத்தத்தையும் அஸ்வின் தனியாக துவம்சம் செய்தார். கடைசி விக்கெட்டை யார் எடுப்பார்கள் என்று போட்டி நிலவிய போது யாருக்கும் இடம் கொடுக்காமல் அஸ்வின் எளிதாக விக்கெட் எடுத்து 300 விக்கெட் சாதனையை நிகழ்த்தினார். எப்போதும் போல இந்த இன்னிங்ஸும் கடைசி விக்கெட் அஸ்வினுக்குத்தான்.


Click it and Unblock the Notifications