மும்பை : நடப்பு ஆண்டில் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள உலக கோப்பைக்கு முன் அணியை தயார் படுத்துகிறேன் என்ற பெயரில் டிராவிட் செய்த காமெடிகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல.
விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு ஓய்வு வழங்கிவிட்டு அக்சர் பட்டேலை பேட்டிங்கில் 4வது வரிசையில் களமிறக்கி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானது இந்தியாவின் பெருஞ்சுவர். பலரும், இது பெருஞ்சுவர் அல்ல, மெட்ராஸ் படத்தில் மக்களை காவு வாங்கும் சுவர் என்று கிண்டல் அடித்து வந்தனர்.

ஆனால், டிராவிட் செய்ததில் நியாயம் கொஞ்சமாவது இருந்தது. உலககோப்பைக்கு நடுவரிசை வீரர்களை தேர்வு செய்ய தான் டிராவிட் இந்த விஷப் பரீட்சையை செய்தார். டிராவிட் செய்ததையே இப்படி கிண்டல் செய்கிறார்களே தோனி, இதை விட பல காமெடிகளை எல்லாம் 2011ஆம் ஆண்டு உலககோப்பை தொடருக்கு முன்பு செய்து இருக்கிறார்.
2011 உலக கோப்பை தொடருக்கு முன்பு இந்திய அணி கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில், முதல் 3 போட்டிகளில் தொடக்க வீரராக தோனி யாரை தெரியுமா தேர்ந்து எடுத்தார். நம்ம முரளி விஜய்யை தான். அவரை அணியின் ஸ்டெப்னி ஓப்பனராக உலககோப்பைக்கு கொண்டு வர தோனி எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

அதை விட பெரிய காமெடி என்னவென்றால், உலக கோப்பைக்கு முன்பு இந்தியா விளையாட போகும் கடைசி போட்டி அது. மேலும், இரு அணிகளும் தலா 2 போட்டியை வென்ற நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக ரோகித் மற்றும் பார்த்தீவ் பட்டேலை தோனி இறக்கினார். தற்போது இதே போன்ற ஒரு யுத்தியை தான் டிராவிட், ரோகித் கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.