
கடுமையாக விமர்சனம்
2007 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அப்போது ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அதுவரை இந்திய அணியில் நிலவி வந்த சிறு சிறு தவறுகளையும் சேர்த்து வைத்து அணியை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

டி20 அணி
இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை தொடர் வந்தது. இந்திய அணியின் மூத்த வீரர்கள் அந்த தொடரில் ஆடுவதில் இருந்து விலகிக் கொண்டனர். இந்தியா அதுவரை விரல் விட்டு எண்ணும் அளவுக்கே டி20 போட்டிகளில் ஆடி இருந்தது.

தோனி தலைமையில் இந்திய அணி
இதை அடுத்து தோனி தலைமையில் இளம் வீரர்கள் அதிகம் கொண்ட அணி தென்னாப்பிரிக்கா கிளம்பியது. இந்தியா அந்த தொடரில் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் கூட அதிசயம் என்றே கருதப்பட்டது. அப்போது ஆஸ்திரேலிய அணி ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையில் வெற்றி பெறும் அணியாக கருதப்பட்டது.

லீக் சுற்றில் போராட்டம்
இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறவே லீக் சுற்றின் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயம் இருந்தது. அந்தப் போட்டியில் ஆண்ட்ரூ பிளின்டாப் மீது இருந்த கோபத்தில் ஒரே ஓவரில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸ் அடிக்க, இந்திய அணி அந்தப் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா பேட்டிங்
இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியது. பலமான ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்தாது என்றே பலரும் கருதினர். அந்த அரை இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி படு நிதானமாக ரன் சேர்த்து வந்தது.

நிதான ஆட்டம்
துவக்க வீரர்கள் கம்பீர் 25 பந்துகளில் 24 ரன்களும், சேவாக் 13 பந்துகளில் 9 ரன்களும் மட்டுமே எடுத்தனர். ராபின் உத்தப்பா 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழந்து 60 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.

தோல்வி உறுதி
அப்போதே இந்திய அணி தோல்வி உறுதி என்ற எண்ணம் எழுந்தது. ஆனால், யுவராஜ் சிங் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடிய ருத்ர தாண்டவத்தை மறக்கவில்லை. அதே பாணியில் இந்தப் போட்டியிலும் ஆடினார். ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஓவரில் 19 ரன்கள், கிளார்க் ஓவரில் 21 ரன்கள் எடுத்தது இந்தியா.

யுவராஜ் சிங் துவம்சம்
யுவராஜ் சிங் 30 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். 5 சிக்ஸ், 5 ஃபோர் அடித்து ஆஸ்திரேலிய அணியை துவம்சம் செய்தார். 18வது ஓவரின் மூன்றாவது பந்தில் யுவராஜ் சிங் ஆட்டமிழந்தார். அதன் பின் தோனி தன் பங்குக்கு அதிரடி காட்டினார்.

தோனி அதிரடி
தோனி ஒரு சிக்ஸ் மட்டுமே அடித்தாலும் 18 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார். இந்தியா கடைசி 10 ஓவர்களில் மட்டும் 128 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 189 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது இந்தியா. பந்துவீச்சில் கைகொடுத்தால் மட்டுமே இந்தியா வெற்றி பெறும் என்ற நிலை தான் அப்போதும் இருந்தது.

ஸ்ரீசாந்த்
எப்போதும் அதிக ரன் கொடுக்கும் ஸ்ரீசாந்த் அந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி அந்தப் போட்டியுடன் நாட்டுக்கு திரும்பியது.


Click it and Unblock the Notifications