தடியடி நடந்தும் திருந்தவில்லையா? ஐதராபாத் வாரியம் மீது பரபர புகார்.. டிக்கெட் விற்பனையில் முறைகேடு!
ஐதராபாத் கிரிக்கெட் வாரியம் டிக்கெட் விற்பனை செய்வதில் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் குவியும் சூழலில் மீண்டும் இந்தியா - நியூசிலாந்து தொடர் மூலம் அது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்கள் நடைபெறவுள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி நாளை மதியம் தொடங்குகிறது.
ஐதராபாத்தில் உள்ள ராஜாஜி சர்வதேச மைதானத்தில் இப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மைதானம் தான் தற்போது ரசிகர்களின் பெரும் கவலையாக உள்ளது.

ஐதராபாத் தடியடி
கடந்த 2022ம் ஆண்டு ஐதராபாத்தில் நடந்த கலவரத்தை யாராலும் மறக்க முடியாது. செப்டம்பர் மாதத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி ஐதராபாத்தின் ராஜாஜி மைதானத்தில் தான் நடைபெற்றது. அதன் டிக்கெட் விற்பனை ஆன்லைனில் நடக்கும் எனக்கூறிவிட்டு, ஆஃப்லைனில் நடத்தப்பட்டது. இதுதான் அப்போது பூகம்பமாக வெடித்தது.

20 ரசிகர்கள் படுகாயம்
சரியான முன்னேற்பாடு செய்யப்படாததால், ரசிகர்கள் கூட்டம் அலைமோதி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அதனை சரிசெய்ய வந்த போலீசார் கடும் தடியடியை நடத்தினர். அதில் 20க்கும் மேற்பட்ட ரசிகர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் ஐதராபாத் வாரிய தலைவர் அசாருதீன் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரப்பட்டது.

மீண்டும் பிரச்சினை
இந்நிலையில் இதே பிரச்சினை மீண்டும் வந்துள்ளது. நியூசிலாந்துடனான முதல் போட்டியும் ராஜாஜி மைதானத்தில் நடக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனையும் தற்போது ஆஃப்லைனில் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் டிக்கெட்களை பல மடங்கு அதிக விலை வைத்து விற்கப்படுவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தரவரிசை
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் நியூசிலாந்து அணி 117 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணியோ 110 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. இந்த 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒருவேளை வெற்றி பெற்றுவிட்டால் இந்திய அணி மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications