மும்பை: இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது ஷமி, 3 முறை தற்கொலை செய்து கொள்ளலாம் என்று சிந்தித்துள்ளதாக பேசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

48 வருட உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் முகமது ஷமி. வெறும் 14 இன்னிங்ஸ்களில் 45 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக முகமது ஷமி இந்த சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நடப்பு உலகக்கோப்பை தொடரில் மட்டும் 3 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
அதேபோல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற மகத்தான சாதனையையும் செய்துள்ளார். மேலும் உலகக்கோப்பை தொடரில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள மிட்செல் ஸ்டார் சாதனையை சமன் செய்துள்ளார்.
இந்திய அணியின் உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ள முகமது ஷமி, சில ஆண்டுகளுக்கு முன் மூன்று முறை தற்கொலை எண்ணம் வந்ததாக சொன்னால் நம்ப முடிகிறதா.. இதுகுறித்து சில ஆண்டுகளுக்கு முன் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவிடம் முகமது ஷமியே வெளிப்படையாக பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
அதில் முகமது ஷமி பேசுகையில், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் 2015ஆம் ஆண்டு தான் கடினமான காலகட்டமாக அமைந்தது. ஏனென்றால் உலகக்கோப்பை தொடரின் பாதியில் அடைந்த காயத்தால், 18 மாதங்கள் என்னால் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பி வர முடியவில்லை. அதன்பின் நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட தொடங்கிய போது, சொந்த பிரச்சனைகள் எழுந்தன.
அந்த நேரத்தில் எனது குடும்பத்தினர் மட்டும் என்னுடன் இல்லையென்றால் அந்த பிரச்சனையில் இருந்து என்னால் மீண்டு வந்திருக்க முடியாது. அந்த நேரத்தில் மூன்று முறை தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணங்கள் வந்துள்ளன. நான் நல்ல மனநிலையில் இல்லாத நேரங்களில் என்னுடன் 24 மணி நேரமும் யாராவது ஒருவர் இருந்துகொண்டே இருப்பார்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் குடும்பத்தினர் உடனிருந்தால் நிச்சயம் மீண்டு வர முடியும்.
ஒருவேளை எனது குடும்பத்தினர் அப்போது ஆதரவாக இல்லையென்றால், நான் தவறான முடிவை கூட எடுத்திருக்க வாய்ப்புகள் உண்டு. அதற்காக நான் குடும்பத்தினருக்கு நன்றி கடன்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார். மனைவி ஹாசின் ஜஹான் முகமது ஷமி மீது மேட்ச் பிக்ஸிங், தன்னை தாக்கியதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இதனால் முகமது ஷமி உடனான பிசிசிஐ ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதன்பின் முகமது ஷமி மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்த விசாரணை குழு, அத்தனை குற்றச்சாட்டுகளும் பொய் என்று அறிவித்தது. இதனை தொடர்ந்து மீண்டும் பிசிசிஐ ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. ஆசிய கோப்பை தொடருக்கு முன் சில மாதம் ஓய்வில் இருந்த முகமது ஷமி, ஆசிய கோப்பை தொடரில் கம்பேக் கொடுத்து பட்டாசாய் பவுலிங் செய்து சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.