மொஹாலி: இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் 19 மாதங்களுக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் அரைசதம் சதம் விளாசி இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்ட போது பலரும் அவரது தேர்வு குறித்து கடுமையான விமர்சனம் வைத்தனர். அந்த விமர்சனங்களும் ஞாயமானவையாக இருந்தன. ஏனென்றால் கடந்த 19 மாதங்களில் சூர்யகுமார் யாதவ் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஹாட்ரிக் டக் அவுட்டாகி சாதனை படைத்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் முதல் 6 ஒருநாள் போட்டிகளில் 2 அரைசதங்களை விளாசிய சூர்யகுமார் யாதவ், 3வது அரைசத்தை 19 மாதத்திற்கு பின் விளாசி இருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஃபினிஷிங் ரோலில் களமிறங்கி 47 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். கேப்டன் கேஎல் ராகுலுக்கு உறுதுணையாக இருந்து நல்ல ஒத்துழைப்பை வழங்கினார்.
அதேபோல் அவரது ஆட்டத்தில் ஸ்வீட் ஷாட்டுக்கு முயற்சி செய்யவே இல்லை. வேகமாக ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற அவசரமும் காணப்படவில்லை. முற்றிலும் வேறு மாதிரியான சூர்யகுமார் யாதவை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு பின் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், இந்த மாதிரியான ஒரு இன்னிங்ஸை ஆட வேண்டும் என்று கனவுடன் தான் ஒருநாள் கிரிக்கெட்டையே விளையாட தொடங்கினேன். கடைசி வரை பேட்டிங் செய்து, ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன்.
ஆனால் இன்றும் என்னால் ஆட்டத்தை கடைசி வரை நின்று முடிக்க முடியவில்லை. ஆனால் முடிவை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் ஏன் சொதப்புகிறேன் என்று புரியாமல் இருந்தேன். அணிகள், பவுலர்கள் என்று அனைத்தும் ஒன்றுதான். இதனால் மீண்டும் தொடங்கியதே இடத்திற்கு சென்றேன். என் மனதில் ரன்கள் சேர்க்க சிறிது வேகம் காட்டுவதை போல் உணர்ந்தேன்.
அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறிது நிதானம் காட்ட வேண்டும், ஆட்டத்தை கடைசி வரை எடுத்து செல்ல வேண்டும் என்று மனநிலைக்கு மாறினேன். எனக்கு தெரிந்த வரை, முதல் முறையாக ஒரு கிரிக்கெட் போட்டியில் ஸ்வீப் ஷாட் ஆட முயற்சிக்கவில்லை. எனது ஸ்ட்ரைய்ட் ட்ரைவ் சிறப்பாக இருப்பதற்கு சந்திரகாந்த் பண்டிட் பயிற்சிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். தொடக்க வீரர்களின் ஆட்டத்தை ரசித்தேன். இந்திய அணிக்காக இன்னும் பல போட்டிகளை வெல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.