உலகத்திலேயே நான் மட்டும்தான் தனிமையா விடப்பட்டதா உணர்ந்தேன்... விராட் கோலி வருத்தம்
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் இறுதி இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அகமதாபாத்தில் உள்ளது.
இந்நிலையில் முன்னாள் இங்கிலாந்து வீரர் மார்க் நிகோலசின் நாட் ஜஸ்ட் கிரிக்கெட் நிகழ்ச்சிக்காக பேசிய விராட் கோலி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
கடந்த 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது சரியாக விளையாடாத கோலி, அப்போது உலகிலேயே தான் தனிமையில் விடப்பட்டதாக உணர்ந்ததாக தற்போது தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் இந்திய அணி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வடிவங்களிலான டெஸ்ட் தொடர் தற்போது திட்டமிடப்பட்டு முதலில் 2 டெஸ்ட் தொடர் நடந்து முடிந்துள்ளது. இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இறுதி 2 டெஸ்ட் போட்டிகளுக்காக இரு அணிகளும் அகமதாபாத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

மனம்திறந்த விராட் கோலி
இந்நிலையில் முன்னாள் இங்கிலாந்து வீரர் மார்க் நிகோலசின் நாட் ஜஸ்ட் கிரிக்கெட் நிகழ்ச்சிக்காக பேசிய கேப்டன் விராட் கோலி பல்வேறு நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். கடந்த 2014 இங்கிலாந்து தொடரின்போது அவர் சொதப்பலான ஆட்டங்களை வழங்கியது குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

விராட்டின் மனஉளைச்சல்
5 போட்டிகளை கொண்ட அந்த தொடரில் முறையே, 1, 8, 25, 0, 39, 28, 0, 7, 6 மற்றும் 20 ரன்களை 13.40 சராசரியில் அவர் அடித்திருந்தார். அந்த தொடரின்போது தான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும் தினந்தோறும் எழுந்திருக்கும்போது தான் அன்றைய தினம் சிறப்பாக விளையாட போவதில்லை என்ற நினைப்பு சிறப்பானதாக இல்லை என்றும் அவர் கூறினார்.

வெளிவர முடியாமல் அவதி
மேலும் அனைவரும் இருந்தாலும் தான் இந்த உலகத்திலேயே தனித்து விடப்பட்டதாக தான் உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிலிருந்து வெளிவரத் தெரியாமல் தான் மிகுந்த அவதிக்குள்ளானதாகவும் தனக்கு ஆதரவாக அணியில் அதிகமானோர் இருந்தாலும் தான் ஆலோசனை பெற நிபுணர்கள் இல்லாத சூழல் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மனஉளைச்சல் குறித்து கோலி
தற்போது உலக அளவில் சிறந்த கேப்டனாகவும் சிறந்த வீரராகவும் காணப்படும் விராட் கோலி, மனதளவில் வீரர்களுக்கு வலிமை முக்கியமான தேவை என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அவரே ஒரு காலகட்டத்தில் மனஉளைச்சலுக்கு ஆளானதை தற்போது வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அந்த தொடரிலிருந்து வெளிவந்து அவர் அடுத்ததாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் 692 ரன்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications