பரிமிங்ஹாம்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அடைந்துள்ள தோல்விக்கு முதல் நாளிலேயே டிக்ளேர் செய்ததே காரணமாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்த கேள்விக்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பதில் அளித்துள்ளார்.
ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அசத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு ஹெட்டிங்லேவில் நடந்த போட்டியில் எப்படி பென் ஸ்டோக்ஸ் தனியாளாக வெற்றியை எட்டிப்பிடித்தாரோ, அதேபோல் கம்மின்ஸ் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார். இங்கிலாந்து அணியின் இந்த தோல்விக்கு, முதல் நாளில் அவசர அவசரமாக டிக்ளேர் செய்ததே காரணமாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசுகையில், இந்தப் போட்டியின் கடைசி நிமிடம் வரை அனைத்து வகையான உணர்வுகளிலும் இருந்தோம். எங்கள் அணியை நினைத்து பெருமை கொள்கிறேன். மீண்டும் ஒரு சிறந்த போட்டியில் பங்குகொண்டது பெருமையாக உள்ளது. போட்டியை பார்த்த அனைவருமே இருக்கையின் நுனிக்கு வந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அதேபோல் அடுத்து வரும் ஆஷஸ் போட்டியை கூடுதலாக பலரும் பார்க்க தொடங்குவார்கள் என்று நினைக்கிறேன்.
என்ன சொன்னாலும் நாங்கள் தோல்வியடைந்திருக்கிறோம். அதனை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். ஆனால் தோல்வியடைந்துவிட்டோம் என்பதற்காக நாங்கள் அணுகுமுறையை மாற்றப் போவதில்லை. பேஸ்பால் அணுகுமுறையை தான் தொடரப் போகிறோம். அடுத்தப் போட்டியில் எங்கள் ஆட்டம் இன்னும் தீவிரமாக இருக்கும். சரியென்று தோன்றும் முடிவுகளை இன்னும் தைரியமாக எடுப்போம். முதல் நாளில் டிக்ளேர் செய்தது குறித்து துளியும் கவலையில்லை.
ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டை வீழ்த்த அதனை சிறந்த வாய்ப்பாகவே கருதினேன். கடைசி 20 நிமிடங்களில் பேட்டிங் ஆடுவது அவ்வளவு சுலபமில்லை. ஒருவேளை ரூட் மற்றும் ஆண்டர்சன் அடுத்தடுத்து ஆட்டமிழந்து, அதே நிலையில் ஆல் அவுட்டாகி இருக்கவும் வாய்ப்புகள் உள்ளதல்லவா.. அதனால் டிக்ளேர் செய்த முடிவால் எந்த பின்னடைவும் ஏற்படவில்லை. நேற்றைய நாளிலும் ஜோ ரூட் சிறப்பாக ஆடினார். முதல் அரைமணி ஆட்டம் ஆச்சரியமாக இருந்தது.
ஆனால் நிச்சயம் வெற்றிக்காக ஆஸ்திரேலிய அணியை பாராட்ட வேண்டும். ஆட்டத்தின் அனைத்து நிலையிலும் சிறப்பாக விளையாடினார்கள். எங்கள் அணியில் பிராட் மற்றும் ராபின்சன் ஆகியோரின் முயற்சியை பாராட்ட வேண்டும். மூன்று சிங்கங்களை நெஞ்சில் ஏந்தி விளையாடப் போகும் ஒவ்வொரு ஆட்டமும் எங்களுக்கு கூடுதல் ஊக்கமாக இருக்கும். அடுத்தப் போட்டியில் களமிறங்குவதற்கு ஆவலாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.