டி20 உலகக் கோப்பையுடன்... ஓய்வு பெறப் போகிறார் மலிங்கா?
மிர்பூர்: இலங்கை டுவென்டி 20 அணியின் கேப்டனும், வேகப் பந்து வீச்சாளருமான லசித் மலிங்கா, டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டித் தொடருடன் ஓய்வு பெற்றாலும் பெறுவேன் என்று கூறியுள்ளார்.
இதனால் இலங்கை அணியின் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். இலங்கையில் அனுபவம் வாய்ந்த வீரர்களும் ஓய்வு பெற்று விட்டதால் அந்த அணி தடுமாறி வருகிறது. இந்த நிலையில் சிறந்த பந்து வீச்சாளரான மலிங்காவும் போய் விட்டால் இலங்கை அணி நிலை குலைந்து விடும் என்று ரசிகர்கள் கவலைப்படுகிறார்கள்.
யார்க்கர் வீசுவதில் மலிங்கா கில்லாடி என்பது நினைவிருக்கலாம். அவரது பந்து வீச்சின் தரம் இன்னும் குறையவில்லை. தொடர்ந்து அதி வேகமாகவே இருந்து வருகிறது.

முழங்கால் காயத்தால் தொடர் அவதி
மலிங்காவுக்கு முன்பு ஏற்பட்ட முழங்கால் காயத்தால் தொடர்ச்சியாக அவர் அவதிப்பட்டு வருகிறார். அதிலிருந்து தான் முழுமையாக மீளவில்லை என்றும் அதை சமாளிக்கத் தான் தடுமாறுவதாகவும் கூறியுள்ளார் மலிங்கா.

ஓய்வு பெறலாம்
நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜெயவர்த்தனேவும், குமார் சங்கக்கராவும், கடந்த டுவென்டி 20 உலகக் கோப்பையை வென்றதும் ஓய்வை அறிவித்தனர். அதேபோல நீங்களும் திட்டமிட்டுள்ளீர்களா என்று கேட்டபோது, இருக்கலாம் என்று பதிலளித்தார் மலிங்கா.

எமிரேட்ஸிடம் தடுமாறி வெற்றி
நேற்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியுடன் மோதியது இலங்கை. இதில் 14 ரன்கள் வித்தியாசத்தில் தட்டுத் தடுமாறி வெற்றி பெற்றது. இருப்பினும் இப்போட்டியில் மலிங்காவின் பந்து வீச்சு சிறப்பாக இருந்து. அவர். 4 விக்கெட்கள் வீ்ழ்த்தினார்.

33 வயதாகிறது
தனது பேட்டியின்போது மலிங்கா மேலும் கூறுகையில், எனக்கு 32 வயது நடக்கிறது. விரைவில் 33 வயதை எட்டி விடுவேன். 12 வருடமாக ஆடி வருகிறேன்.

காயம் படுத்துகிறது
முழங்காலில் ஏற்பட்ட காயம் மோசமானதாக இருக்கிறது. குணமடைந்து விட்டாலும் கூட முழுமையாக அதன் தாக்கத்திலிருந்து மீள முடியவில்லை. ஒன்றரை வருடம் ரெட்ஸ் எடுத்தால்தான் சரியாகும் போலிருக்கிறது.

ரெஸ்ட்டா.. ஓய்வா?
எனவே தற்போதைய நிலையில் ஒன்றரை வருடம் ரெய்ட் எடுத்து விட்டு வந்து ஆட வேண்டும். அல்லது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற நிலையில் நான் உள்ளேன்.

முழு வீச்சில் ஆட முடியாது
எனது அணிக்காக முழு வீச்சில் ஆட தற்போதைய நிலையில் முடியாத நிலை. எனவே என்னால் இன்னும் எவ்வளவு காலத்திற்கு விளையாட முடியும் என்று தெரியவில்லை.

செய்தால் சிறப்பாக இருக்க வேண்டும்
எனது தேசிய அணிக்காகவும், ஐபிஎல் அணிக்காகவும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். தற்போது உலகக் கோப்பைப் போட்டியில் எனது தேசிய அணியின் வெற்றிக்காக விளையாட விரும்புகிறேன். இதற்காக வலியைப் பொறுத்துக் கொள்ளவும் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார் மலிங்கா.
எப்படி இருப்பினும் உலகக் கோப்பைப் போட்டித் தொடருக்குப் பிறகு கிரிக்கெட்டிலிருந்து மலிங்கா ஓய்வு பெறலாம் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications