அத்தனை பேரையும் அடித்து நொறுக்கி "ஆப்பாயில்" போடனும்... கோஹ்லியின் ஆசை!
டெல்லி: இன்னும் 5 வருஷத்துக்கு இந்திய அணிதான் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்க வேண்டும் என்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி விருப்பம் தெரிவித்துள்ளார்.
டோணி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டதால் புதிய கேப்டனாகியுள்ளார் கோஹ்லி. இவரது திட்டங்கள், உத்திகள், வியூகங்கள் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.
இந்த நிலையில் கோஹ்லி தனது ஐந்தாண்டுத் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது அடுத்த ஐந்து வருடத்திற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கியிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இஎஸ்பிஎன் டிவிக்கு அவர் அளித்துள்ள ஒரு பேட்டியிலிருந்து...

நாமெல்லாம் நண்பேண்டா
இந்திய அணியினருடன் நட்புறவை வலுப்படுத்த ஆர்வமாக உள்ளேன். அணிக்குள் அனைவருக்கும் இடையே நல்ல தோழமை இருக்க வேண்டியது அவசியம்.

நிறைய திறமை உள்ளது
நம்மிடம் நிறைய திறமைகள் உள்ளன. நம்மால் நிச்சயம் எதையும் சாதிக்க முடியும். அந்தத் திறமைகளை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றியும், சாதனையும் அடங்கியுள்ளது.

5 வருடத்திற்கு
குறைந்தது அடுத்த 5 வருடத்திற்கு நாம் ஆதிக்கம் செலுத்த வேண்டும். நம்மால் நிச்சயம் அது முடியும். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நிச்சயம் இதை சாதிக்க முடியும்.

உறவுகள் தொடர்கதை
வீரர்களுக்கிடையே நல்லுறவு நீடிப்பது அவசியம், வலுவான உறவாக அது அமைய வேண்டும். இதை நான் செய்யப் போகிறேன். அருமையான அணியாக அதைக் கட்டெழுப்பப் போகிறேன்.

குடும்பம் ஒரு கதம்பம்
வருடத்திற்கு 250 முதல் 280 நாட்கள் வரை அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். எனவே ஒரு குடும்பம் போல அனைவரும் இணைந்து, இயைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

செம டீம்
தற்போது உள்ள அணி அருமையான அணி, பலமான அணி, ஒற்றுமையான அணி. அனைவரும் இணைந்து ஆட விருநம்புகிறோம். தனித் தனியாக சுயநலமாக விளையாட இங்கு யாரும் விரும்பவில்லை. இதுதான் எனது ஆசையும் கூட.

தைரியமா ஆடுங்க
வீரர்களை நான் சுதந்திரமாக ஆட விரும்புகிறேன். அவர்களுக்குள் எந்தவிதமான பயமும், அச்சமும், சந்தேகமும் இல்லாத வகையில் அவர்கள் சுதந்திரமாக ஆட வேண்டும். அணியில் இடம் இருக்குமா, இருக்காதா என்ற எண்ணமே அவர்களுக்கு வரக் கூடாது.

ஆஸ்திரேலியர்கள் போல
ஆஸ்திரேலியர்களைப் பாருங்கள். எதிரில் விளையாடுவது யார் என்று அவர்கள் கவலைப்படுவதே இல்லை. அடித்து நொறுக்குவது மட்டுமே அவர்களது இலக்காக உள்ளது. அதே போல இந்திய அணியினரும் ஆட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

பெஸ்ட் டீம் நாங்கதான்
டெஸ்ட் கிரிக்கெட்டில் பெஸ்ட் டீம் என்றால் அது இந்தியா என்றுதான் இருக்க வேண்டும். அதுதான் எனது ஆசையும், லட்சியமும் ஆகும். சில நேரம் அந்த இலக்கை நோக்கி நாம் போயிருக்கிறோம். ஆனால் அடுத்த 5 வருடத்தில் இது நிச்சயம் நிகழும் என்றார் கோஹ்லி.
எல்லாம் சரி, நீங்க யார் கூடவும் சண்டை போடாமல், "சேட்டை" பண்ணாமல் சமத்தா விளையாடுங்க முதல்ல!


Click it and Unblock the Notifications