பெங்களூரு: அடுத்த 2 மாதங்களில் எனது கனவையும், என் அணியின் கனவையும் நிறைவேற்ற வேண்டும் என்பதே இலக்கு என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
6 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடர் இன்னும் 3 நாட்களில் தொடங்கவுள்ளது. அதேபோல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் 38 நாட்களில் நடக்கவுள்ளது. அடுத்தடுத்த மாதங்களில் இந்திய அணி இரு முக்கிய ஐசிசி தொடர்களில் விளையாட உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி தொடர்களில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. இந்த நிலையில் அடுத்தடுத்து கோப்பைகளை வெல்வதற்காக இந்திய அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், ஒரு கேப்டனாகவும், தொடக்க வீரராகவும் வெளியில் இருந்து வரும் கருத்துகளுக்கு செவி கொடுக்காமல், என் மனநிலையை நிதானமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தயாராகி வருகிறேன். சரியாக சொல்ல வேண்டுமென்றால், 2019 உலகக்கோப்பைத் தொடருக்கு முன் என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலைக்கு செல்ல விரும்புகிறேன். அந்த மனநிலையில் இருந்து மீண்டும் உலகக்கோப்பைக்கு தயாராக வேண்டும்.
2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் 648 ரன்களை விளாசினேன். அப்போது என்னவெல்லாம் செய்தேனோ, அதனை மீண்டும் நினைவுபடுத்தி வருகிறேன். எந்தவொரு வெற்றியையும், தோல்வியையும் ஒருநாள் இரவில் மாற்றிவிட முடியாது. ஒரேயொரு போட்டியோ, ஒரேயொரு சாம்பியன்ஷிப்போ என்னை உடனடியாக மாற்றிடாது. கடந்த 16 ஆண்டுகளாக என்னுள் எந்த மாற்றமும் இல்லை. மாற்றிக் கொள்ளவும் விரும்பியதில்லை.
அடுத்த 2 மாதங்களில் என்னுள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. எனது கனவை, இந்திய அணியின் கனவை எப்படி அடுத்த 2 ஆண்டுகளில் அடையப் போகிறோம் என்பதே மனநிலையாக உள்ளது. அதேபோல் லெகசியை பற்றி கவலைப்படும் ஆள் நான் அல்ல. 16 ஆண்டு காலம் விளையாடிய பின், எனது லெகசியை பற்றி ரசிகர்கள் பேச வேண்டும்.
எப்போதும் நம்பர்களை பற்றி எப்போதும் கவலைக் கொண்டதில்லை. தற்போதைய சூழலில் அடுத்த 2 மாதங்கள் சிறந்த நினைவுகளை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை பொறுத்தவ்ரை இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பதாக தெரிவித்துள்ளார்.