மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
150ஆவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாடிய குயிண்டன் டி காக் இன்றைய ஆட்டத்தில் 174 ரன்கள் விளாசினார். தன்னுடைய கடைசி தொடரில் விளையாட இந்த தொடரில் மட்டும் மூன்று சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இந்த நிலையில் தன்னுடைய சிறப்பான செயல்பாட்டிற்கு ஆட்ட நாயகன் விருதை வென்ற குயிண்டன் டி காக், இந்த போட்டி குறித்து பல்வேறு கருத்துகளை பேசினார்.உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த போட்டியில் நான் மனநிறைவாக இருப்பதைவிட மிகவும் சோர்வாக உணர்கிறேன். ஏனென்றால் கடும் வெயிலில் இன்று நான் பேட்டிங் செய்தேன்.

இன்றைய ஆட்டத்தில் எங்கள் அணி வீரர்கள் அனைவரும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள் என்று நம்புகிறேன். எங்கள் அணியில் அனைவரும் தங்களுடைய பங்களிப்பை சரியாக செய்தார்கள். இதன் மூலம் எங்களுக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்தது. பட்டியலில் நாங்கள் முன்னேறி இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
சதம் அடித்துவிட்டு ஆட்டம் இழக்காமல் அதனை பெரிய ரன்களாக மாற்ற வேண்டும் என்ற யுக்தியில் எல்லாம் நான் விளையாடவில்லை. இது தன்னாலே நடக்கிறது என நினைக்கிறேன். 150 ஆவது ஒருநாள் போட்டியில் நான் விளையாடுவதை குறித்து காலையில் கொஞ்சம் பதற்றமாக இருந்தது. ஏனென்றால் இது தனிப்பட்ட முறையில் எனக்கு சிறந்த நாள் ஆகும். ஆனால் இன்றைய ஆட்டம் எனக்கு மகிழ்ச்சிகரமாக இருந்தது.
அணியின் இரண்டு புள்ளிகள் பெற்றுத்தர காரணமாக இருந்தது குறித்து மகிழ்ச்சி தான். என்னை விட கிளாசென் சிறப்பாக விளையாடினார் என்று நினைக்கிறேன். அவர் எப்படி இவ்வளவு உற்சாகத்துடன் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் என்ன பானம் அருந்துகிறாரோ அது எனக்கு வேண்டும். ஏனென்றால் அவர் அவ்வளவு ஸ்பெஷலாக விளையாடுகிறார். எங்களுக்கு மட்டுமல்ல மற்ற அணிகளுக்கும் கிளாஸ்சனின் ரகசியம் தேவைப்படும் என நினைக்கிறேன். இந்த உலகக் கோப்பை தொடரை சூறாவளி போல் கிளாசின் தாக்குகிறார். தனிப்பட்ட முறையில் நான் அவருக்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்று குயிண்டன் டி காக் கூறினார்.