மும்பை: பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் பங்கேற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் பலரும் கடந்த சில நாட்களாக பதற்றத்தில் இருந்தனர். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சாம் கரனின் சகோதரர் டாம் கரன் விமான நிலையம் மூடப்பட்டிருப்பதை பார்த்து கதறி அழுத சம்பவம் நடந்தேறியிருக்கிறது.
மேலும், முன்னாள் சிஎஸ்கே வீரர் டேரில் மிட்செல் இனி பாகிஸ்தானுக்கு வர மாட்டேன் என வேதனையில் புலம்பி இருக்கிறார். இது தொடர்பாக வங்கதேச வீரர் ரிஷாத் ஹுசைன் ஊடகத்திடம் என்ன நடந்தது? என கூறியிருக்கிறார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் மே 10 அன்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால், அதற்கு முந்தைய நாட்களில் பாகிஸ்தானில் என்ன மாதிரியான சூழ்நிலை இருந்தது என்பதை விவரிக்கும் வகையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் பங்கேற்றிருந்த வங்கதேச வீரர் ரிஷாத் ஹுசைன் அங்கு வெளிநாட்டு வீரர்களின் மனநிலை எப்படி இருந்தது என விவரித்தார்.

2025 பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தால் பாதியில் நிறுத்தப்பட்டது. ராவல்பிண்டி மைதானத்திற்கு அருகே நடந்த டிரோன் தாக்குதல் சம்பவத்தால் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் உடனடியாக நிறுத்தப்பட்டது. அடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு (UAE) மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உடனடியாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் துபாய்க்கு விரைந்தனர். அதுவரை என்ன நடந்தது என்பதை ரிஷாத் ஹுசைன் விவரித்தார்.
"'நாங்கள் துபாய்க்குச் சென்றவுடன், நாங்கள் விமானம் ஏறிய விமான நிலையத்தில் ஏவுகணை தாக்கியதாக அறிந்தோம். நாங்கள் சென்றதற்கு 20 நிமிடத்திற்குப் பிறகு இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்திருக்கிறது. அந்தச் செய்தி மிகவும் அதிர்ச்சிகரமாகவும், சோகத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது."
"எனது குடும்பம் பல இரவுகள் தூங்காமல் இருந்தார்கள். வெடிகுண்டு வெடிப்பு மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் அவர்கள் கவலையுடன் இருந்தனர். நான் அடிக்கடி அவர்களிடம் நான் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டி வந்தது".
"மற்ற நாட்டு வீரர்களான சாம் பில்லிங்ஸ், டேரில் மிட்செல், குசல் பெரேரா, டேவிட் வைஸ், டாம் கர்ரன் ஆகியோர் மிகவும் பயந்து போயிருந்தனர். டேரில் மிட்செல் என்னிடம் "இனி நான் பாகிஸ்தானுக்கு வரமாட்டேன்" என்று சொன்னார். டாம் கரன் விமான நிலையத்திற்குச் சென்று இருந்த போது, அந்த விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் அவர் சிறு குழந்தை போல அழத் தொடங்கினார். அவரை இரண்டு மூன்று பேர் சேர்ந்து சமாதானம் செய்ய வேண்டி வந்தது."
"பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) இது பற்றி எங்களிடம் பேசிய போது, இரண்டு ட்ரோன் தாக்குதல் சம்பவங்களை எங்களிடம் இருந்து மறைத்து விட்டார்கள். எப்படியோ நாங்கள் அனைவரும் துபாய்க்கு பாதுகாப்பாக வந்து விட்டோம்" என்று கூறியிருக்கிறார் ரிஷாத். வீரர்கள் அனைவரும் துபாய்க்குச் சென்று விட்டாலும், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரையும் துபாயில் நடத்துவதற்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.