பார்வையற்றவர்களுக்கான மகளிர் கிரிக்கெட்.. தங்கம் வென்று இந்தியா சாதனை.. பைனலில் அபார ஆட்டம்
பர்மிங்காம் : பார்வையற்றவர்களுக்கான மகளிர் கிரிக்கெட் போட்டியில் சர்வதேச அளவில் இந்திய அணி தங்கப்பதக்கம் என்று சாதனை படைத்திருக்கிறது.
பார்வையற்றவர்களுக்கான சர்வதேச விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்கம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கிரிக்கெட் பிரிவில் இந்திய மகளிர் அணி லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது.

இறுதிச்சுற்றில் இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து இந்திய மகளிர் அணி பேட்டிங் செய்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.
இதனால் இந்தியாவின் இலக்கு 42 ரன்கள் என மாற்றி அமைக்கப்பட்டது. எனினும் இந்திய மகளிர் அணி அபாரமாக விளையாடி ரன்களை குவித்தார்கள். இதனால் 42 ரன்கள் என்ற இலக்கை நான்காவது ஓவரிலே இந்திய மகளிர் அணி எட்டியது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியது.
பார்வையற்றவர்களுக்கான விளையாட்டுப் போட்டி சர்வதேச அளவில் நடைபெறுகிறது. இதில் முதல்முறையாக கிரிக்கெட் சேர்க்கப்பட்ட நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருக்கிறது. தற்போது ஆடவர் பிரிவில் இந்திய அணி இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
லீக் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய நிலையில் அதற்கு பழி தீர்க்கும் முனைப்பில் இந்திய ஆடவர் அணி களம் இறங்க உள்ளது. செஸ்ஸில் வெள்ளி பதக்கம், சந்திரயான், உலகத் தடகளப் போட்டியில் நீரஜ் சோப்ராவின் ஆதிக்கம் என இந்தியா அசத்தி வரும் நிலையில் தற்போது பார்வையற்றோர் மகளிர் கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று இருக்கிறது.


Click it and Unblock the Notifications