
புள்ளிகளின் பெர்சன்டேஜ்
இந்த சூழலில், இந்த இரண்டாம் சுற்று தொடருக்கான புதிய புள்ளிகள் விதிமுறைகளை ஐசிசி இன்று அறிவித்தது. அதன்படி, அடுத்த தொடரில், அணிகள் ஒவ்வொன்றும் பெரும் புள்ளிகளின் சதவிகிதத்தின் அடிப்படையில், டாப் 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு போட்டிக்கும் மொத்தம் 12 புள்ளிகள் வழங்கப்பட உள்ளது. ஒரு அணி வெற்றிப் பெறும் பட்சத்தில், அந்த அணிக்கு 100 சதவிகிதம் அதாவது 12 புள்ளிகள் அப்படியே வழங்கப்படும். ஒருவேளை போட்டி டை (சமன்) ஆகும் பட்சத்தில், இரு அணிகளுக்கும் 6 புள்ளிகளாக பகிர்ந்து அளிக்கப்படும். அதேசமயம், ஒரு போட்டி வெற்றி தோல்வி இன்று டிரா ஆகும் பட்சத்தில், 4 புள்ளிகள் (33.33 சதவீதம்) வழங்கப்படும். போட்டியில் தோற்கும் அணிக்கு 0 புள்ளிகள் தான்.

டாப் மோஸ்ட் 60
அதேசமயம், இந்த மொத்த புள்ளிகள் என்பது ஒவ்வொரு தொடருக்கும் வேறுபடும். அதாவது ஒரு தொடரில் எத்தனை போட்டிகள் நடைபெறுகிறது என்பதைப் பொறுத்து புள்ளிகள் எண்ணிக்கை மாறுபடும். அதாவது, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் அணிக்கு மொத்தம் 24 புள்ளிகள் வழங்கப்படும். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் அணிக்கு மொத்தம் 36 புள்ளிகள் வழங்கப்படும். 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் அணிக்கு மொத்தம் 48 புள்ளிகள் வழங்கப்படும். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் அணிக்கு மொத்தம் 60 புள்ளிகள் வழங்கப்படும். இவ்வாறு மொத்த புள்ளிகள் தொடருக்கு ஏற்ப மாறுபடும்.

முழு லிஸ்ட் வெளியீடு
அதேபோல், ஒவ்வொரு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடர்கள் குறித்தும் ஐசிசி ட்வீட் செய்துள்ளது. அதில், இந்திய அணி உள்நாட்டில் இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுடன் மோதுகிறது. அதேபோல், வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் அவர்கள் நாடுகளில் மோதுகிறது. வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் இந்த இரண்டாம் கட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

கடும் நெருக்கடி
உள்நாட்டில் இலங்கையை எதிர்கொள்ளும் இந்தியா, நிச்சயம் அவர்கள் சிறப்பாக டீல் செய்யும் என நம்பலாம். அதேசமயம், நியூசிலாந்து, ஆஸ்திரேலிய தொடர்கள் இந்தியாவுக்கு சொந்த மண்ணாக இருந்தால் கூட கடுமையாகத் தான் இருக்கும். ஏற்கனவே பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரை இந்தியாவிடம் அடுத்தடுத்து 2 முறை இழந்துவிட்டதால், இம்முறை இந்தியாவில் வைத்து திருப்பிக் கொடுக்க ஆஸ்திரேலியா காத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல், நியூசிலாந்து இந்தியாவில் டஃப் கொடுக்கலாம்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
வெளிநாட்டு டூரை பொறுத்தவரை, இங்கிலாந்து, தென்னப்பிரிக்கா, வங்கதேசம் என மூன்றுமே இந்திய அணிக்கு கடுமையான சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. வங்கதேசம் உள்ளூரில் புலி என்பதால், கோலி படைக்கு சவால் காத்திருக்கிறது. எது எப்படி இருந்தாலும், மீண்டும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.


Click it and Unblock the Notifications