டோணி, குக்.. இருவருமே சட்ட நடைமுறையை மதிக்க வேண்டும்.. ஐசிசி அட்வைஸ்!
துபாய்: இந்திய கேப்டன் டோணி மற்றும் இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் ஆகிய இருவருமே ஐசிசியின் சட்ட நடைமுறைகளை மதித்து நடக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவுரை வழங்கியுள்ளது.
ரவீந்திர ஜடேஜா - ஜேம்ஸ் ஆண்டர்சன் விவகாரத்தில் ஜடேஜாவுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. இது இந்தியத் தரப்பை கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசிக்கு கேப்டன் டோணி கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார். இது நியாயமற்றது என்றும் டோணி கூறியுள்ளார்.
நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜடேஜாவைத் தள்ளி விட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பதே சர்ச்சையாகும். இந்த சர்ச்சையில் ஜடேஜாவுக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது ஐசிசி. இதுதான் தற்போது விவகாரமாகியுள்ளது.

இது அநீதி
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்திருந்த டோணி, இது அநீதியான தீர்ப்பு. தீர்ப்பி்ல் தவறு உள்ளது என்று சாடியிருந்தார்.

மதிச்சு நடங்கப்பா
இதையடுத்து இரு தரப்பு கேப்டன்கள் மற்றும் வீரர்களுக்கு ஐசிசி ஒரு அறிவுரையை வழங்கியுள்ளது. இரு தரப்புமே சம்பந்தப்பட்ட விவகாரத்தில் ஐசிசியன் நீதி நடைமுறையை மதித்து நடக்க முன்வர வேண்டும் என்று ஐசிசி கூறியுள்ளது.

கருத்துச் சொல்வதை விடுங்க
இதுகுறித்து ஐசிசியின் தலைமை செயலதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் கூறுகையில், ஐசிசியின் ஒழுங்கு நடைமுறை நடவடிக்கைகள் குறித்து டோணியும், குக்கும் புரிந்து கொள்ள முன்வர வேண்டும். இதுதொடர்பாக இருவருமே பொதுப்படையாக, வெளியில் கருத்துச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.

டோணி கருத்து தவறு
இதில் இந்திய கேப்டன் டோணியின் கருத்து சற்று தீவிரமாக உள்ளது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

ஜடேஜாவுக்கு அபராதம் விதித்தது சரியே
போட்டி நடுவர் டேவிட் பூன் அளித்த தீர்ப்பை ஏற்று ரவீந்திர ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது சரியானதே.

பூன் முடிவை மதிக்கிறோம்
சம்பவம் தொடர்பாக டேவிட் பூன் எடுத்த முடிவையும், அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடைமுறைகளையும் ஐசிசி மதிக்கிறது. ஆதரவு தெரிவிக்கிறது.

சரியாத்தானே சொல்லியிருக்காரு பூனு...
பூன் பல்வேறு ஆதாரங்கள், தீவிர ஆய்வு, விசாரணைகளுக்குப் பின்னர்தான் தனது முடிவை தெரிவித்துள்ளார். அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

அனைவரும் அமைதி காக்க வேண்டும்
எனவே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவருமே இதை ஏற்று அமைதி காக்க வேண்டும். சட்ட நடைமுறைகளை மதித்து நடக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.

ஜேம்ஸ் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை
ஜடேஜா மீதான தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கு. அதேசமயம், ஜேம்ஸ் ஆண்டர்சன் மீதான புகார் குறித்து ஐசிசியின் நீதி கமிஷனர் கார்டன் லூயிஸ், வருகிற வெள்ளிக்கிழமை விசாரிக்கவுள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது லெவல் 3 விதி மீறல் புகார் சுமத்தப்பட்டுள்ளது. இதில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications