விடாமல் துரத்தும் மேட்ச் பிக்சிங்.. ஜோய்சா, குணவர்த்தனேவுக்கு ஐசிசி நோட்டீஸ்.. நெருக்கடியில் இலங்கை
துபாய்:மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் சிக்கி அதிரடியாக நீக்கப்பட்ட இலங்கை அணியின் முன்னாள் கோச் நுவான் ஜோய்சா, குணவர்த்தனே ஆகியோர் 14 நாட்களில் பதிலளிக்க ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த டிசம்பர் மாதம் டி-10 லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அந்த தொடரில் மேட்ச் பிக்சிங் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி விசாரணை நடத்தியது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஊழல் தடுப்பு பிரிவின் மேற்பார்வையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை, ஐசிசி விசாரித்தது. இந்த விவகாரத்தில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவுக்கு ஐசிசி தடை விதித்தது. அவர் தற்போது ஓய்வு பெற்றுவிட்டார்.
இருப்பினும் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் 2 ஆண்டுகள் ஈடுபடக் கூடாது என்று ஐசிசி தடை விதித்திருக்கிறது. அதேநேரத்தில் ஊழல் குற்றச்சாட்டில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான தில்கரா நீக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தில் இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், பயிற்சியாளருமான நுவான் ஜோய்சா, அவிஷ்கா குணவர்த்தனே ஆகியோர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு 14 நாட்களில் பதிலளிக்குமாறு இருவருக்கும் ஐசிசி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரிய ஊழல் தடுப்பு பிரிவு அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பு ஒன்றில் ஐசிசி கூறியிருக்கிறது. ஐசிசியின் இந்த நடவடிக்கை, இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications