ஆக்லேண்ட்: நியூசிலாந்தில் இந்திய அணி தங்கியிருக்கும் ஹோட்டலுக்குள் பத்திரிக்கையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடும் இந்திய அணி நியூசிலாந்தின் ஆக்லேண்ட் நகரில் இருக்கும் ஹெரிடேஜ் ஹோட்டலில் தங்கியுள்ளது. இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை நுழைய விடாதீர்கள் என இந்திய அணியின் மீடியா மேனேஜர் டாக்டர் ஆர்.என். தாபா மற்றும் அணியின் டைரக்டர் ரவி சாஸ்திரி ஆகியோர் ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஹோட்டல் நிர்வாகமோ பத்திரிக்கையாளர்களை உள்ளே நுழையவிடாததுடன், அவர்களை டீ, காபி குடிக்கக் கூட ஹோட்டலுக்குள் அனுமதிப்பது இல்லை. மேலும் வெளியே இருந்து கூட ஹோட்டலை வீடியோ எடுக்க நிர்வாகம் அனுமதிப்பது இல்லை.
இதனால் பத்திரிக்கையாளர்கள் கடுப்பாகியுள்ளனர். முன்னதாக துணை கேப்டன் விராட் கோஹ்லிக்கும் பத்திரிக்கையாளர் ஒருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து கோஹ்லியை முறையாக நடந்து கொள்ளுமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.
மேலும் நடந்த சம்பவம் பற்றி பத்திரிக்கையாளரும், வீரரும் மறந்துவிட்டு உலகக் கோப்பை போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று வாரியம் தெரிவித்தது.