இந்திய பவுலர்களை டீலில் விட்ட ஆப்கன் கேப்டன்.. ஆப்கானிஸ்தான் 272 ரன் அடிக்க காரணமே இவர் தான்!
டெல்லி : இந்திய அணியின் பலமான பந்துவீச்சையே சர்வ சாதாரணமாக ஆடினார் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி.
ஓமர்சாய் அரை சதம் அடித்தார். ஆனால், அவர் சென்ற பின்னும் ஆடிய ஹஸ்மத்துல்லா ஷாஹிதி 80 ரன் குவித்த பின்னரே வெளியேறினார். இவரை ஆட்டமிழக்கச் செய்வதற்குள் இந்திய அணி தவித்துப் போனது.
அவரது ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 272 ரன்கள் குவித்தது. இது யாருமே எதிர்பாராத ரன் குவிப்பாகும்.

யார் இந்த ஹஸ்மத்துல்லா ஷாஹிதி?
இவர் ஆப்கானிஸ்தான் அணியின் எதிர்காலமாக கருதப்படுகிறார். ஆப்கானிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த ஒரே வீரரும் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி தான்.
சிறந்த பேட்ஸ்மேன் ஆன இவரை அணியின் கேப்டனாக நியமித்து இருக்கிறது ஆப்கானிஸ்தான் அணி நிர்வாகம். மற்ற மூத்த வீரர்கள் இருந்தாலும், இவரது சிறப்பான ஆட்டத்தால் இவருக்கு இந்த பதவி உயர்வு கிடைத்துள்ளது.
ஹஸ்மத்துல்லா ஷாஹிதி ஒருநாள் போட்டிகளில் இதுவரை சதம் அடிக்கவே இல்லை. அவரது அதிகபட்ச ஸ்கோர் 97. பேட்டிங் சராசரி 32 ஆகும். 65 போட்டிகளில் 1793 ரன்கள் குவித்துள்ளார். 16 அரைசதங்கள் அடித்துள்ளார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டியில் என்ன நடந்தது?
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஆன 2023 உலகக்கோப்பை லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை வைத்து ஆப்கன் அணியை கட்டுப்படுத்த முடிவு செய்தது.
ஸ்பின்னர் அஸ்வினை நீக்கி விட்டு ஷர்துல் தாக்குர் அணியில் சேர்க்கப்பட்டார். அதனால், ஆப்கன் அணி தடுமாறும் என நினைத்த நிலையில், அந்த அணியின் மிடில் ஆர்டரில் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி மற்றும் ஓமர்சாய் சிறப்பாக பேட்டிங் செய்து ரன் குவித்தனர்.
ஓமர்சாய் சிறப்பாக ஆடி 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னும் தாக்குப்பிடித்து ஆடிய ஹஸ்மத்துல்லா ஷாஹிதி 43வது ஓவரில் தான் அவுட் ஆனார். அவர் 88 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார்.
மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை வைத்து ஆப்கன் அணியை குறைந்த ரன்களில் ஆட்டமிழக்கச் செய்யலாம் என்ற ரோஹித் சர்மாவின் கனவு உடைந்தது. அந்த அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்தது.


Click it and Unblock the Notifications