மும்பை: உலகக்கோப்பை போட்டிகள் நடக்கவுள்ள மைதானங்களில் பவுண்டரி எல்லைகள் குறைந்தபட்சம் 70 மீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்று ஐசிசி அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் 4வது முறையாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. அக்.5ஆம் தேதி தொடங்கவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், நவ.19ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான 10 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டு, அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி விளையாடவுள்ள 9 லீக் போட்டிகளும் வெவ்வேறு மைதானங்கள், வெவ்வேறு மாநிலங்களில் நடத்தப்படவுள்ளது.

இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், மைதானங்களை தயார் செய்யும் இறுதிக்கட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் பகலிரவு போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதல் சாதகம் ஏற்படும் சூழல் உள்ளது. இதனை ஐபிஎல் தொடர்களிலேயே ஏராளமான முறை பார்த்திருக்கிறோம்.
ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் டாஸ் வென்று கண்ணை மூடிக் கொண்டு பவுலிங்கை தேர்வு செய்வார்கள். இதற்கு ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் வரும் பனிப்பொழிவே காரணமாக உள்ளது. அதேபோல் ஐபிஎல் தொடர்களின் போது பவுண்டரி எல்லைகள் 55 முதல் 65 மீட்டர் தூரம் மட்டுமே அதிகமாக அமைக்கப்படும். இதனால் பேட்ஸ்மேன்களிடம் இருந்து சிக்சர் மழையை காண முடியும்.
அதேபோல் பெரிய ஸ்கோர் அடிக்கப்பட வேண்டும் என்பதற்காக பிட்ச்கள் தார் ரோட்டை போல் அமைக்கப்படும். இந்த காட்சிகள் ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை தொடர்களில் நடக்கக் கூடாது என்பதற்காக மைதான பராமரிப்பாளர்களுக்கு முக்கியமான சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிட்ச்களில் அதிகளவு புற்கள் இருக்க வேண்டும் என்று ஐசிசி அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல் பவுண்டரி எல்லைகள் குறைந்தபட்சம் 70 மீட்டர் தூரம் அமைக்கப்பட வேண்டும் என்றும், பனிப்பொழிவு அதிகமாக இருந்தால் அதனை கட்டுப்படுத்த Wetting Agent என்ற கெமிக்கலை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக டி20 போட்டியின் கூடுதல் வெர்ஷனாக அல்லாமல் ஐசிசி தரமான உலகக்கோப்பையை நடத்த முயற்சித்து வருவதாக ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஒருநாள் போட்டி என்பது 260 முதல் 270 ரன்கள் வகையிலான போட்டியாக இருக்க வேண்டும் என்றும், அதற்கான பிட்ச்களை தயார் செய்தால் மட்டுமே டி20 யுகத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை அழியாமல் இருக்கும். அதற்கு அண்மையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடர் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.