லண்டன்: சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசியின் தலைமையகம் அடுத்த சில மாதங்களில் மும்பைக்கு மாற்றப்பட வாய்ப்புகள்ளது.
வரும் ஜூலை மாதம் ஐசிசி தலைவராக சரத்பவார் பொறுப்பேற்றால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமையகம் மும்பைக்கு மாற்றப்படும் என லண்டன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
மும்பை வான்கடே மைதானத்திற்கு அருகில் தற்போது பிசிசிஐ உள்ள இடத்தில் ஐசிசி தலையைகம் அமையும் என்றும் கூறப்படுகிறது. இல்லையெனில் இதற்கு மாற்றாக விமானநிலையத்துக்கு அருகில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் வளாகமும் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.
எனினும் இதுதொடர்பான முடிவுகள் மற்ற நாடுகளின் கருத்தை பெற்ற பின்னரே இறுதி செய்யப்படும் என்றும் நிர்வாகிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. டெஸ்ட் போட்டிகள் விளையாடும் நாடுகளில் குறைந்தது 7 நாடுகள் சம்மதித்த பின்னரே இவ்விஷயத்தில் இறுதி முடிவெடுக்கப்படும்.
தற்போது துபாயில் உள்ள ஐசிசி தலைமையகத்தை மீண்டும் பழையபடி லண்டனுக்கே மாற்றுவதில் வரி பிரச்னை உள்ளிட்ட சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
கிரிக்கெட் மற்றும் வர்த்தகத்திற்கு மையப் பகுதியான மும்பை, ஐசிசி தலைமையகத்திற்கான சரியான தேர்வு என்று தற்போதைய ஐசிசி தலைவர் டேவிட் மார்கன் தெரிவித்தாலும், கிரிக்கெட்டின் தலைமையகம் அதன் தாய்மண்ணில் இருப்பதே சிறந்தது என்ற கருத்து வலுவாக இருந்து கொண்டுதான் இருக்கிறது.
எனினும் வரும் ஜூலை மாதம் ஐசிசி தலைவர் பதவி சரத்பவார் வசம் வந்தால், தலைமையகம் நிச்சயம் மும்பைக்கு மாறும் என ஐசிசி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.