ICC T20 World Cup 2021: அணிகளின் "குரூப்ஸ்" ரிலீஸ்.. இந்தியாவும் "பங்காளி"யும் ஒரே பிரிவில்
மும்பை: இதோ வந்துவிட்டது உலக டி20 போட்டிக்கான பிரிவுகள் குறித்த விவரம். இதில், இந்தியா மோதும் போட்டிகள் அனைத்தும் சும்மா அப்படி இருக்கப் போகிறது.
Recommended Video
டி20 உலகக் கோப்பை தொடர், கடந்த 2020ம் ஆண்டே நடந்திருக்க வேண்டியது. கொரோனா காரணமாக, இந்தாண்டு இந்தியாவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்தியாவில் இந்தாண்டு கொரோனா எப்படி இருந்தது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆகையால், தொடரை அமீரகத்துக்கு மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான்
இந்நிலையில், உலகக் கோப்பை டி20 போட்டிக்கான பிரிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. பிசிசிஐ இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், 'சூப்பர் 12' சுற்றில், குரூப் "2"ல் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில், பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. மேலும் இரண்டு அணிகள் இதில் இணையவுள்ளன. மேலும் இந்த பிரிவில் "Round 1"ல் குரூப் 'ஏ'வில் இறுதிப் போட்டியில் தோல்வி பெறும் அணியும், குரூப் 'பி'ல் வெற்றிபெறும் அணியும் இணைய உள்ளன.

குரூப் A மற்றும் B
குரூப் "1"ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த பிரிவில் "Round 1"ல் குரூப் 'ஏ'வில் இறுதிப் போட்டியில் வெற்றிப் பெறும் அணியும், குரூப் 'பி'ல் இறுதிப் போட்டியில் தோல்வி பெறும் அணியும் இணைய உள்ளன. குரூப் "A"வில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் "B"வில் வங்கதேசம், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, ஓமன் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

தரவரிசை அடிப்படையில்
ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை 2021 க்கான போட்டிகள் முழுவதும் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெற உள்ளது. 2021 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி அணிகள் தரவரிசையில் இடம் வகித்த இடங்களின் அடிப்படையில் குரூப்புகள் பிரிக்கப்பட்டதாக ஐசிசி கூறியுள்ளது.

உலகத் தரமாக
இதுகுறித்து பேட்டி அளித்துள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி, "ஐ.சி.சி டி 20 உலகக் கோப்பையை நடத்துவதன் மூலம் ஓமன் உலக கிரிக்கெட்டின் கட்டமைப்பில் இணைவது நல்ல விஷயம். இது நிறைய இளம் வீரர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்ட உதவும். ஓமனில் ஒரு உலகத் தரம் வாய்ந்த நிகழ்வாக இந்த உலக டி20 தொடர் அமையும் என்பதை நாங்கள் அறிவோம்" என கங்குலி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications