மும்பை: 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் கோப்பைக்காகப் போட்டியிடுகின்றன. இந்த ஆண்டு, இந்தியாவில் ஐந்து இடங்களிலும் இலங்கையில் மூன்று இடங்களிலும் என எட்டு முக்கிய மைதானங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இந்த உலகக் கோப்பையில் பல முன்னணி பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் களமிறங்குகின்றனர். குறிப்பாக, இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளின் நட்சத்திர வீரர்களிடமிருந்து பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. இவர்களின் தற்போதைய ஃபார்மையும் திறமையையும் பார்க்கும்போது, இத்தொடரில் பல புதிய வரலாற்றுச் சாதனைகள் படைக்கப்பட வாய்ப்புள்ளது. அதனை தற்போது காணலாம்.

டி20 உலகக் கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச அணி ஸ்கோர் (260/6) என்ற சாதனை இலங்கையிடம் உள்ளது. 2007ல் செப்டம்பர் 14 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் கென்யாவுக்கு எதிராக இலங்கை இந்த ரன்களைக் குவித்தது. 19 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் இந்தச் சாதனை இம்முறை நிச்சயம் உடைக்கப்படலாம்.
ஒரு உலகக் கோப்பைத் தொடரில் அதிக வெற்றிகள் பெற்ற சாதனை இந்திய அணியிடம் உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடிய எட்டு போட்டிகளிலும் வென்று, 100% வெற்றி சதவீதத்துடன் கோப்பையை வென்றது. இம்முறை, பங்கேற்கும் அணிகளில் ஏதேனும் ஒன்று ஒன்பது போட்டிகளிலும் வென்று புதிய உலக சாதனை படைக்கும் வாய்ப்புள்ளது.
ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனை விராட் கோலியிடம் உள்ளது. இந்திய அணிக்காக 35 போட்டிகளில் விளையாடி அவர் 1292 ரன்கள் சேர்த்துள்ளார். இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 1013 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இந்தத் தொடரில் கூடுதலாக 280 ரன்கள் எடுத்தால், பட்லர் கோலியைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிப்பார்.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தனிநபரின் அதிகபட்ச ஸ்கோர் பிரெண்டன் மெக்கல்லம் பெயரில் உள்ளது. 2012 செப்டம்பர் மாதம் 21 அன்று பல்லேகலேவில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அவர் 58 பந்துகளில் 123 ரன்கள் எடுத்தார். 16 ஆண்டுகளாக இந்தச் சாதனை முறியடிக்கப்படாத நிலையில், இம்முறை இது ஆபத்தில் உள்ளது.
ஒரு குறிப்பிட்ட டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் (319 ரன்கள்) எடுத்த சாதனை விராட் கோலி வசம் உள்ளது. 2026 தொடரில் ஒரு வீரர் அதிகபட்சமாக ஒன்பது போட்டிகளில் விளையாட முடியும் என்பதால், 319 ரன் இலக்கைக் கடந்து புதிய வரலாறு படைக்கப்படலாம்.
வெஸ்ட் இண்டீஸின் நிக்கோலஸ் பூரன், 2024 டி20 உலகக் கோப்பையில் 17 சிக்ஸர்கள் அடித்து, ஒரு தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய சாதனையைப் படைத்தார். இம்முறை, அபிஷேக் சர்மா, ஃபில் சால்ட், குயின்டன் டி காக், டிம் டேவிட், ஹர்திக் பாண்டியா, ஃபின் ஆலன் போன்ற பல வீரர்கள் இச்சாதனையை உடைக்கக் காத்திருக்கின்றனர்.
ஆண்கள் டி20 உலகக் கோப்பை வரலாற்றில், பங்களாதேஷின் ஷாகிப் அல் ஹசன் 43 போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை எடுத்த சாதனையாளர். இச்சாதனையை முறியடிக்க, இலங்கையின் வனிந்து ஹசரங்காவிற்கு 14, ஆப்கானிஸ்தானின் ரஷித் கானுக்கு 14, ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பாவிற்கு 15, தென்னாப்பிரிக்காவின் அன்ரிச் நார்ஜேயிற்கு 16 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.
இந்தியாவின் தோனி, 33 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விக்கெட் கீப்பராக 32 ஆட்டமிழப்புகளைச் செய்து சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் குயின்டன் டி காக் 30 ஆட்டமிழப்புகளுடன் இருக்கிறார். இம்முறை அவர் தோனியின் சாதனையை நிச்சயம் கடந்து புதிய சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலகக் கோப்பையில் பீல்டராக அதிக கேட்ச்கள் பிடித்த சாதனை ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் வசம் உள்ளது (25 கேட்ச்கள்). கிளென் மேக்ஸ்வெல் மேலும் மூன்று கேட்ச்கள் எடுத்தால், வார்னரின் சாதனையை முறியடித்து, போட்டியின் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அவுட்ஃபீல்டர் என்ற பெருமையைப் பெறுவார்.
ஆப்கானிஸ்தானின் டி20ஐ கேப்டன் ரஷித் கான், இதுவரை 111 டி20ஐ போட்டிகளில் 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 20 ஓவர் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்ற உலக சாதனையை எட்ட அவருக்கு இன்னும் 13 விக்கெட்டுகளே தேவை. அத்துடன், அவர் மேலும் நான்கு விக்கெட்டுகள் எடுத்தால், தனது ஒட்டுமொத்த டி20 விக்கெட்டுகளின் எண்ணிக்கையை 700 ஆக உயர்த்துவார்.