வங்கதேசத்துக்கு அடுத்த அடி.. வெட்கக்கேடா இருக்கு.. மகளிர் உலகக்கோப்பையை UAEக்கு மாற்றிய ஐசிசி
துபாய்: 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை வங்கதேசத்தில் நடைபெற இருந்தது. அக்டோபர் மாதம் இந்த தொடர் தொடங்க இருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இந்த தொடரை மாற்றி இருக்கிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.
வங்கதேச நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக கலவரங்கள் நடந்து. தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். பல கொள்ளை சம்பவங்களும் நடந்தேறி உள்ளன. இந்த நிலையில் அங்கு உலகக் கோப்பையை நடத்த முடியாத சூழலில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த முடிவை எடுத்துள்ளது.

இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகளிர் டி20 உலக கோப்பையை வங்கதேசத்தில் நடத்த முடியாமல் போனது வெட்கக்கேடானது. வங்கதேச கிரிக்கெட் அமைப்பு மிகச் சிறப்பாக இந்த தொடரை நடத்தி இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். மோசமான சூழ்நிலைக்கு இடையே வங்கதேச கிரிக்கெட் அமைப்பு இந்த தொடரை நடத்துவதற்கு அனைத்து விதத்திலும் முயற்சி செய்தது. எனினும், இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளின் அரசுகள் வங்கதேசத்திற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி இருந்ததால் அங்கு தொடரை நடத்துவது முடியாத காரியமாக மாறி விட்டது."
"எனினும், இந்த தொடரை நடத்தும் உரிமை வங்கதேச கிரிக்கெட் அமைப்பிடமே உள்ளது. எமிரேட்ஸ் கிரிக்கெட் அமைப்புக்கு நாங்கள் நன்றி கூறிக் கொள்கிறோம். வங்கதேச கிரிக்கெட் அமைப்பின் சார்பில் இந்த தொடரை நடத்த அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளும் இந்த தொடரை நடத்த முன் வந்தார்கள். அவர்களுக்கும் எங்கள் நன்றியை கூறிக் கொள்கிறோம். 2026 ஆம் ஆண்டில் அந்த இரண்டு நாடுகளிலும் ஐசிசி தொடர்களை நடத்துவதற்கு நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்." இவ்வாறு ஐசிசி அறிக்கையில் கூறி உள்ளது.
இது வங்கதேச நாட்டிற்கு மற்றொரு அடியாக விழுந்துள்ளது. வளர்ந்து வரும் நாடான வங்கதேசம் இது போன்ற சர்வதேச விளையாட்டு தொடரை நடத்துவதன் மூலம் பிற நாடுகளின் நன்மதிப்பை பெற்று இருக்க முடியும். ஆனால், கலவரத்தின் காரணமாக இந்த நாடு தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. அத்துடன் சர்வதேச விளையாட்டு தொடரான உலகக்கோப்பையை நடத்தும் வாய்ப்பையும் இழந்திருக்கிறது.
சில வாரங்கள் முன்பு வங்கதேச நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா கலவரக்காரர்களிடம் இருந்து தப்பி ஓடிய நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகள் வங்கதேசத்துக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்து உள்ளன. இந்த நாடுகளின் அணிகள் மகளிர் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதிலும் சிக்கல் இருந்தது. இந்த நிலையில் தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலகக்கோப்பை தொடரை வங்கதேசத்தில் இருந்து, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடம் மாற்றி இருக்கிறது.


Click it and Unblock the Notifications