என்னாது.. 16 வருடத்தில் முதன்முறையாக கோலியை முந்திய ரோஹித் சர்மா.. வெளியான பேட்டிங் தரவரிசை
மும்பை : இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஐசிசி ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் ஆறாம் இடத்தை பிடித்து இருக்கிறார்.
இதில் முக்கியமானது முதல் முறையாக ஒருநாள் போட்டி தரவரிசையில் விராட் கோலியை தரவரிசையில் முந்தி இருக்கிறார் ரோஹித் சர்மா.

விராட் கோலி 2008இல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆனார். அப்போது முதல் 16 ஆண்டுகளாக தரவரிசையில் கோலிக்கு பின்னே மட்டுமே ரோஹித் சர்மா இடம் பெற்று வந்தார். ரோஹித் சர்மா 2007இல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது. துவக்க வீரராக ஆன பின்னரும் கூட ரோஹித் சர்மாவால் இத்தனை ஆண்டுகள் கோலி இடத்தை முந்த முடியாமல் இருந்தது. ஆனால், இப்போது அதை உடைத்து இருக்கிறார் ஹிட்மேன்.
ஆனால், தற்போது கோலி தரவரிசையில் ஒன்பதாம் இடத்தில் இருக்கும் நிலையில், ரோஹித் சர்மா ஆறாம் இடத்தை பிடித்து சாதித்து இருக்கிறார். 2023 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 84 பந்துகளில் 131 ரன்கள் குவித்து ஒரு சதம் அடித்தார். மேலும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 86 ரன்கள் அடித்து இருந்தார்.
கோலி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் கடினமான சூழ்நிலையில் அரைசதம் அடித்து 85 ரன்கள் குவித்து இருந்தார். இந்த நிலையில், அவர் தன் ஒன்பதாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 836 புள்ளிகளுடன் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் சுப்மன் கில் 818 புள்ளிகளுடன் இருக்கிறார். உலகக்கோப்பையின் முடிவில் சுப்மன் கில் பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்துக்கு வர வாய்ப்பு உள்ளது.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஜோஷ் ஹேசல்வுட் முதல் இடத்தில் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் இந்தியாவின் முகமது சிராஜும், எட்டாவது இடத்தில் குல்தீப் யாதவும் இருக்கிறார்கள். ஆல் - ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications