சுப்மன் கில், சிராஜ் வரலாற்று சாதனை.. ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதலிடம்.. கோலி முன்னேற்றம்
மும்பை : ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சுப்மன் கில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன்பு முதல் இடத்தில் இருந்த பாபர் அசாம், நடப்பு உலக கோப்பை தொடரில் சரிவர விளையாடாததால் அவர் தன்னுடைய இடத்தை இழந்தார்.
இதனை அடுத்து கில் தற்போது 830 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறார். ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சுப்மன் கில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 92 ரன்கள் விளாசினார்.

இதன் மூலம் தற்போது அவர் முதலிடத்தை பிடித்திருக்கிறார். இதற்கு முன்பு ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசைக்கான பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், தோனி, விராட் கோலி ஆகியோர் மட்டும்தான் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார்கள்.தற்போது முதலிடம் பிடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை கில் பெற்றிருக்கிறார். இதேபோன்று தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியதன் மூலம் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது 770 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதன் மூலம் விராட் கோலி மீண்டும் நம்பர் 1 வீரராக வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். கில் 830 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் பாபர் அசாம் 824 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், டிகாக் 771 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், விராட் கோலி 770 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், டேவிட் வார்னர் 743 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும், ரோகித் சர்மா 739 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் உள்ளனர்.
இதேபோன்று பந்துவீச்சாளருக்கான பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது சிராஜ் முதலிடம் பிடித்திருக்கிறார். 709 புள்ளிகளுடன் அவர் தற்போது உள்ளார். இரண்டாவது இடத்தில் கேசவ் மஹராஜ் 694 புள்ளிகளுடன் இருக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் ஆடம் சாம்பா மூன்றாவது இடத்திலும், இந்திய வீரர் குல்தீப் யாதவ் நான்காவது இடத்திலும் உள்ளனர். இதபோன்று பும்ரா 8வது இடத்திலும் சமி பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications