மும்பை : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. அதற்கு அந்த அணி செய்த இரண்டு தவறுகள் மட்டுமே காரணம் என விமர்சகர்கள் கூறி உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணி இது போன்ற ஒரு தோல்வியை அதன் கிரிக்கெட் வரலாற்றில் சந்தித்து இருக்காது. அப்படி ஒரு தோல்வியை கொடுத்து ஆப்கானிஸ்தான் அணியை நிலைகுலைய வைத்து இருக்கிறது ஆஸ்திரேலியா.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 291 ரன்கள் குவித்தது. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அந்த அணியின் இப்ராகிம் சத்ரான் சதம் அடித்தார். உலகக்கோப்பை தொடரில் சதம் அடிக்கும் முதல் வீரர் அவர் தான்.

இப்படி எல்லாம் முதல் பாதியில் நன்றாக சென்றது. அடுத்து ஆஸ்திரேலியா எப்படியும் இந்த இலக்கை சேஸிங் செய்து விடும் என எண்ணிய போது ஆஸ்திரேலியாவின் அதிரடி துவக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் டக் அவுட் ஆகியும், டேவிட் வார்னர் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். அடுத்து வரிசையாக விக்கெட் விழ ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 91 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது. வெற்றிக்கு 200 ரன்கள் தேவை என்ற நிலை.
இதன் பின் ஆஸ்திரேலியா ஜெயிக்கவே முடியாது என அனைவரும் எண்ணிய போது களத்தில் கிளென் மேக்ஸ்வெல் - பாட் கம்மின்ஸ் இருந்தனர். இதில் மேக்ஸ்வெல் மட்டுமே அதிரடியாக ரன் அடிக்கும் ஆற்றல் கொண்டவர். அவர் விக்கெட் போனால் ஆஸ்திரேலியா கதை முடிந்தது என எண்ணிய போது அவர் கொடுத்த எளிய கேட்சை கோட்டை விட்டார் ஆப்கன் வீரர் முஜீப் உர் ரஹ்மான். அப்போது மேக்ஸ்வெல் 27 ரன்களே எடுத்து இருந்தார்.
ஆப்கானிஸ்தான் செய்த அந்த ஒரு தவறுக்கு பின் ஆஸ்திரேலியா சுதாரித்தது. மேக்ஸ்வெல் மட்டும் ரன் அடிக்க, கம்மின்ஸ் ரன்னே அடிக்காமல், மேக்ஸ்வெல்லுக்கு ஸ்ட்ரைக் கொடுக்கும் வேலையை மட்டும் செய்தார். அதனால், ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு விக்கெட் வீழ்த்துவது கடினம் ஆனது. கம்மின்ஸ் தடுப்பாட்டம் ஆடுகிறார். அவர் விக்கெட்டை வீழ்த்த முடியாது. மறுபுறம் மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டம் ஆடுகிறார் மேக்ஸ்வெல் அரைசதம் அடித்த போதே ஆப்கானிஸ்தான் பதறியது.
அதுவரை தொடர்ந்து சீரான இடைவெளியில் ஆப்கானிஸ்தான் அணி விக்கெட்களை வீழ்த்திய நிலையில், சில ஓவர்கள் விக்கெட் கிடைக்கவில்லை என்றதும் அந்த அணி பதறத் துவங்கி விட்டது. அது தான் ஆப்கானிஸ்தான் செய்த இரண்டாவது தவறு. மனதளவில் பயந்து போன ஆப்கானிஸ்தான் பதற்றத்தில் பந்து வீசியதால், மேக்ஸ்வெல் விக்கெட்டை கைப்பற்றுவதா அல்லது ரன் குவிப்பை தடுக்கும் வகையில் பந்து வீசுவதா என தெரியாமல் தடுமாறியது.
இந்த இரண்டு தவறுகளே ஆப்கானிஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம். இதை பயன்படுத்திய மேக்ஸ்வெல் காலில் வலியுடன் ஆடிய போதும், ஒரு காலை மட்டும் ஊன்றிக் கொண்டு போராடி 201 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்தார். ஆப்கானிஸ்தான் அணிக்கு இது போன்ற அனுபவம் இதற்கு முன் இல்லை என்பதால் அந்த அணி சறுக்கி விட்டது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அனுபவத்தின் ஊற்று என்பதால் மோசமான சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக மாற்றி வெற்றி பெற்றது.
மேக்ஸ்வெல் கடைசி வரை நின்று இரட்டை சதம் அடித்தார். பாட் கம்மின்ஸ் 68 பந்துகளில் வெறும் 12 ரன்கள் எடுத்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். ஆப்கானிஸ்தான் பதற்றத்தால் ஆஸ்திரேலியாவின் இந்த அணுகுமுறையை புரிந்து கொண்டு உடைக்க முடியவில்லை.