லக்னோ : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டு தவறான தீர்ப்புகளை கொடுத்தார் டிவி அம்பயர்.
ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் என இரண்டு முக்கிய விக்கெட்களை இழந்தது ஆஸ்திரேலியா.

கள நடுவர் சொன்ன தீர்ப்பில் குழப்பம் இருந்தால் தான் டிவி அம்பயரையே கேட்பார்கள். அவர் ரீப்ளே செய்து பார்த்து சரியான தீர்ப்பை வழங்குவார் என்பதே அதற்கு காரணம். ஆனால், இங்கே ரீப்ளேவில் அவுட் இல்லை என்று தெரிந்த போதும் அவுட் கொடுத்தார் டிவி அம்பயர்.
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 311 ரன்கள் குவித்தது. அடுத்து ஆஸ்திரேலிய அணி சேஸிங் செய்யத் துவங்கியது.
லக்னோ ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினம் என்பதால் இரண்டாவது பாதியில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய திணறியது. 312 ரன்கள் இலக்கை எட்ட வேகமாக ரன் எடுக்க வேண்டிய சூழலில், அந்த அணி டெஸ்ட் போட்டி போல ஆடியது. எந்த வீரரும் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபடவில்லை.
இந்த சூழ்நிலையில், ஸ்டீவ் ஸ்மித் சற்று அதிரடி ஆட்டம் ஆடத் துவங்கினார். அப்போது தென்னாப்பிரிக்க வீரர் பாடா வீசிய பந்து அவர் காலில் பட்டது. தென்னாப்பிரிக்க அணி அவுட் கேட்ட போது கள அம்பயர் மறுத்து விட்டார். தென்னாப்பிரிக்கா ரிவ்யூ கேட்டது.
ரீப்ளேவில் பால் ட்ரேக்கிங் மூலம் பந்து காலில் பட்டு ஸ்டம்ப்பில் படுகிறதா என பார்த்தார் டிவி அம்பயர் ரிச்சர்ட் கெட்டில்பரோ. பந்து லெக் ஸ்டம்ப்பில் தான் பட்டது. வலது கை பேட்ஸ்மேன் காலில் பந்து பட்டு, அது பால் ட்ரேக்கிங்கில் லெக் ஸ்டம்ப்பில் பட்டால் டிவி அம்பயர் அவுட் கொடுக்க மாட்டார்கள். அதை கள நடுவரின் தீர்ப்புக்கே விட்டு விடுவார்கள். ஆனால், இந்த முறை டிவி அம்பயர் அவுட் கொடுத்து விட்டார்.
அடுத்து மார்கஸ் ஸ்டோனிஸ் அதே ரபாடா பந்தில் பேட்டிங் செய்த போது, பந்து அவர் கிளவுஸில் பட்டு விக்கெட் கீப்பர் டி காக் வசம் சென்றது. கேட்ச் பிடிக்கப்பட்டதாக தென்னாப்பிரிக்க வீரர்கள் அவுட் கேட்ட போது கள அம்பயர் அவுட் தர மறுத்தார்.
ஆனால், தென்னாப்பிரிக்க அணி ரிவ்யூவிற்கு சென்றது. மீண்டும் அதேடிவி அம்பயர் பந்து அவர் கிளவுஸில் படுகிறதா என பார்த்தார். பந்து ஸ்டோனிஸ் வலது கை கிளவுஸில் பட்டு கேட்ச் பிடிக்கப்பட்டது. ஆனால், விதிப்படி கை பேட்டில் தொட்டு இருந்தால் மட்டுமே அவுட் தர முடியும். ஆனால், ஸ்டோனிஸ் வலது கையை பேட்டை விட்டு தள்ளி வைத்திருந்தார். இடது கையில் மட்டுமே பேட்டை பிடித்து இருந்தார்.
ஆனால், டிவி அம்பயர் ஒரு பக்கம் இருந்து பார்த்தால் வலது கை சுண்டு விரல், இடது கையில் படுவது போல இருப்பதை மட்டும் பார்த்து அவுட் கொடுத்து விட்டார்.
இந்த இரண்டு விக்கெட்களும் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. கள அம்பயரும் சேர்ந்தே இரண்டு முறையும் அதிர்ந்தார். ஆனால், எதுவும் செய்ய முடியாத நிலையில் அவர் அமைதியாக இருந்தார்.
இரண்டு விக்கெட்களின் போதும் ரசிகர்கள் கொதித்துப் போனார்கள். தொடர்ந்து தவறான தீர்ப்பு அளித்த அந்த அம்பயரை நீக்க வேண்டும் என கடும் விமர்சனத்தை முன் வைத்தனர்.