பெங்களூர் : 2023 உலகக்கோப்பையில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா வேகமாக முன்னேறி தற்போது நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
முன்னதாக அந்த அணி தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. ஆனால், அடுத்த இரண்டு போட்டிகளில் வென்று தன் நிலையை தலைகீழாக மாற்றி இருக்கிறது ஆஸ்திரேலியா.
மறுபுறம் நான்காம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி தனது இடத்தை நெட் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணியிடம் இழந்துள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, இந்த உலகக்கோப்பையில் தன் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
இத்துடன் மொத்தம் இரண்டு வெற்றிகளில் தலா 2 புள்ளிகள் பெற்று மொத்தம் 4 புள்ளிகள் பெற்ற ஆஸ்திரேலியா நான்காவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. பாகிஸ்தான் அணியும் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று இருந்தாலும், அந்த அணி -0.456 நெட் ரன் ரேட் பெற்று ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா -0.193 நெட் ரன் ரேட் பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் போட்டியின் முடிவில் மற்ற அணிகளின் புள்ளிப் பட்டியல் இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. நியூசிலாந்து அணி நான்கு போட்டிகளில் ஆடி நான்கிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
இந்தியாவும் நான்கு போட்டிகளில் ஆடி நான்கிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்தை விட குறைவாக இருப்பதால் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி மூன்று போட்டிகளில் ஆடி இரண்டு வெற்றிகள் பெற்று 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடைசி ஐந்து இடங்களில் இங்கிலாந்து, வங்கதேசம், நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் உள்ளன.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் வரும் ஞாயிறு அன்று மோத உள்ளன. அந்தப் போட்டியின் முடிவில் புள்ளிப் பட்டியலில் எந்த அணி முதல் இடத்தை பெறும் என்பது தெரிய வரும். அரை இறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருக்க வேண்டும். எனவே, பாதி தொடருக்குள் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ஐரி இறுதி வாய்ப்பு அதிகம் என்பதால் இனி வரும் போட்டிகளில் அனைத்து அணிகளும் வெற்றிக்காக போராடும்.