அவுட்டுனா அவுட்தான் கிளம்புங்க.. மேத்யூஸ் கெஞ்சியும் இரக்கமே காட்டாத வங்கதேச கேப்டன் - Timed Out
டெல்லி : இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் களத்துக்கு வந்த போதும் பந்தை சந்திக்காமல் 3 நிமிடத்திற்கும் மேல் தாமதம் செய்ததால் அவர் அவுட் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், அப்போது வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் அவரை ஆடுமாறு கோரி இருந்தால் இது அவுட் இல்லை என கூறப்படுகிறது.
ஆனால், ஷகிப் அல் ஹசன் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்காமல், ஏஞ்சலோ மேத்யூஸ் சொன்னதை காதில் வாங்காமல் அம்பயரிடம் அவுட் என கோரினார். இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
வங்கதேசம் - இலங்கை அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இரண்டு அணிகளுமே அரை இறுதி வாய்ப்பை இழந்த போதும், இரண்டு அணிகளுக்கும் இடையே முன் பகை உள்ளது.

அதனால், போட்டி தொடங்கி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்த சில நிமிடங்களிலேயே குசால் மென்டிஸ் - வங்கதேச வீரர் தன்சிம் சகிப் இடையே வார்த்தைகள் தடித்தன. இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர். அதனை அடுத்து அம்பயர் அவர்களை தடுத்தார்.
இந்த சூடு அடங்கிய சில ஓவர்கள் கழித்து இலங்கை 4 விக்கெட்களை இழந்த நிலையில் மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது அவர் தவறான ஹெல்மட்டை எடுத்து வந்து விட்டார். அதனால் ஆடுகளத்துக்கு வந்த பின் வேறு ஹெல்மட்டை எடுத்து வருமாறு தன் அணியினருக்கு சைகை செய்தார்.
அவருடைய ஹெல்மட்டை தேடி எடுத்து வந்தார் ஒரு இலங்கை வீரர். ஆனால், இதற்குள் 3 நிமிடங்களுக்கும் மேல் ஆகி விட்டது. ஐசிசி விதிப்படி ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆகி சென்ற பின், அடுத்த பேட்ஸ்மேன் 3 நிமிடங்களுக்குள் களத்துக்கு வர வேண்டும். ஆனால், மேத்யூஸ் பேட்டிங் ஆடாமால் ஹெல்மட் மாற்ற நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதால் அவுட் கேட்டார் வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன்.
அப்போது அம்பயர்கள் அவுட் என அறிவித்தனர். ஆனால், இதை எதிர்பார்க்காத ஏஞ்சலோ மேத்யூஸ், ஷகிப் அல் ஹசனிடம் தன் நிலைமையை எடுத்துக் கூறினார். ஆனால், அவர் அதை காது கொடுத்து கேட்க தயாராக இல்லை. அதனால், ஏஞ்சலோ மேத்யூஸ் வெளியேறினார். ஷகிப் நினைத்து இருந்தால் அவர் அவுட் இல்லை என ஆடுமாறு கோரி இருக்கலாம். ஆனால், அவர் இரக்கம் காட்டவில்லை.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்த முதல் பேட்ஸ்மேன் ஏஞ்சலோ மேத்யூஸ் தான். இந்த சம்பவம் இலங்கை அணி பேட்டிங் செய்த போது 24.2 ஓவரில் நடைபெற்றது. மேலும், ஒரு பந்தை கூட சந்திக்காமல் அவுட் ஆனார் மேத்யூஸ். விதிப்படி இந்த அவுட் பந்துவீச்சாளர் கணக்கில் சேராது. பொதுவான விக்கெட்டாக இது கருதப்படும்.
இந்த சம்பவம் நடந்த பின் வீரர்கள் அறைக்கு சென்ற மேத்யூஸ் கோபத்துடன் காணப்பட்டார். தன் ஆதங்கத்தை இலங்கை பயிற்சியாளர்களிடம் முறையிட்டார். அடுத்த சில பந்துகள் கழித்து இலங்கை பயிற்சியாளர், களத்துக்கு வந்து அம்பயர்களுடன் இது குறித்து பேசினார். ஆனால், அம்பயர்கள் தாங்கள் விதிப்படி அவுட் கொடுத்ததாக கூறினர். மேலும், அப்போது முடிவை மாற்றினாலும் வேறு பேட்ஸ்மேன் ஆடத் துவங்கிய பின் வெளியேறி சென்ற வீரரை ஆட அழைக்க முடியாது.


Click it and Unblock the Notifications