புனே: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி தங்களுடைய இரண்டாவது வெற்றியை பெற்று இருக்கிறது. இதன் மூலம் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெரும் வாய்ப்பை இங்கிலாந்து அணி தக்க வைத்துக் கொண்டது.

இந்த நிலையில் இந்தத் தொடர் முழுவதும் மோசமாக விளையாடிய இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஐபிஎல் மினி ஏலம் நடக்கப் போகிறது என்ற செய்தி வெளியானவுடன் சதம் அடித்து அசத்தினார்.
பென் ஸ்டோக்ஸ் இந்த ஆட்டத்திற்கு ஆட்டநாயகன் விருதும் கிடைத்தது. இது குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ் நான் சதம் அடித்ததை விட எங்கள் அணி வெற்றி பாதைக்கு திரும்பி இருப்பது தான் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த உலகக்கோப்பை எங்களுக்கு மிகவும் கடினமான தொடராக அமைந்தது. இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்தது. டென்னிஸ் பந்து பவுன்ஸ் ஆவது போல் ஆடுகளத்தில் பந்து பேட்டிற்கு நன்றாக வந்தது
எனவே இந்த ஆட்டத்தை கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்று நினைத்தேன்.அது போல் நடந்தது மகிழ்ச்சியே,நானும் கிறிஸ் வொக்ஸ் இணைந்து களத்தில் நேரத்தை செலவிட்டு பிறகு நல்ல ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைத்தோம். முதலில் பந்துகளை வீணடித்தாலும் பிறகு நன்றாக விளையாடி ரன்கள் சேர்த்தோம். கிறிஸ் வொக்ஸ் ஒரு நல்ல ஆல்ரவுண்டர். அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்கு சிறந்த வீரராக விளங்குகிறார்.

இன்று தன்னுடைய திறமையை அவர் நிரூபித்திருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் நெருக்கடி வந்த போதெல்லாம் நாங்கள் ஸ்கோர் போர்டை பார்த்து இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என்று நினைத்து விளையாடினோம் என்று கூறினார். இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்புக்கு செல்ல முடியாது என்று தெரிந்தவுடன் அணியை விட்டு விலக நினைத்தீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இல்லை என்று பதில் அளித்துள்ளார். இந்த நிலையில் ஐபிஎல் தொடர் வருகிறது என்பதற்காகவே பென் ஸ்டோக்ஸ் தற்போது ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார் என்று ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.