மும்பை : 2023 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று முடிந்துள்ள நிலையில், இதுவரை ஆடியதில் சிறந்த 11 வீரர்கள் கொண்ட அணியை கிரிக்கெட் ஜாம்பவான்கள் மேத்யூ ஹெய்டன், அனில் கும்ப்ளே தேர்வு செய்தனர்.
அவர்கள் தேர்வு செய்த 11 வீரர்கள் கொண்ட அணியில் ஐந்து இந்திய வீரர்கள் இடம் பெற்றனர். ஆனால், ஒரு பாகிஸ்தான் வீரர் கூட அந்த சிறந்த வீரர்கள் கொண்ட அணியில் இடம் பெறவில்லை.

2023 உலகக்கோப்பை தொடரின் அரை இறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த நிலையில், உலகக்கோப்பையின் சிறந்த அணியையும் அந்த நான்கு அணிகளில் இருந்து மட்டுமே கும்ப்ளே மற்றும் ஹெய்டன் தேர்வு செய்தனர்.
துவக்க வீரர்களாக தென்னாப்பிரிக்காவின் க்வின்டன் டி காக் மற்றும் ரோஹித் சர்மாவை தேர்வு செய்தனர். டி காக் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ரோஹித் சர்மா 503 ரன்கள் குவித்து நான்காவது இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் 499 ரன்கள் குவித்த போதும் அவரை தேர்வு செய்யவில்லை.

அடுத்து பேட்டிங்கில் மூன்று மற்றும் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய விராட் கோலி மற்றும் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவை தேர்வு செய்தனர். விராட் கோலி 594 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ரச்சின் அதே பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ரச்சின் துவக்க வீரராக அல்லது மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்து வந்தாலும் நான்காம் வரிசையிலும் களமிறக்கலாம் என கும்ப்ளே கூறினார்.
அடுத்து ஐந்து மற்றும் ஆறாம் வரிசையில் பேட்டிங் செய்ய ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னன் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் தென்னாப்பிரிக்காவின் அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசென்-ஐ தேர்வு செய்தனர். அவர்களை தேர்வு செய்ய முக்கிய காரணமாக அவர்களின் ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக இருப்பதை குறிப்பிட்டார் மேத்யூ ஹெய்டன். மேக்ஸ்வெல் ஆப்கானிஸ்தான் போட்டியில் 201 ரன்கள் அடித்ததையும் குறிப்பிட்டார்.
அடுத்து பந்துவீச்சில் ஸ்பின்னர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பாவை தேர்வு செய்தனர். ஜம்பா அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ஜடேஜா ஏழாவது இடத்தில் இருக்கிறார். அவர் ஆல் ரவுண்டர் என்பதால் அவரும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கும்ப்ளே கூறினார். வேகப் பந்துவீச்சில் தென்னாப்பிரிக்காவின் மார்கோ ஜான்சன், இந்தியாவின் முகமது ஷமி, பும்ராவை தேர்வு செய்தனர்.
அனில் கும்ப்ளே, மேத்யூ ஹெய்டன் தேர்வு செய்த உலகக்கோப்பையின் சிறந்த 11 வங்கதேசம் வீரர்கள் கொண்ட அணி : க்வின்டன் டி காக், ரோஹித் சர்மா, விராட் கோலி, ரச்சின் ரவீந்திரா, கிளென் மேக்ஸ்வெல், ஹென்ரிச் கிளாசன், ரவீந்திர ஜடேஜா, மார்கோ ஜென்சென், முகமது ஷமி, பும்ரா, ஆடம் ஜம்பா.