48 வருட உலகக்கோப்பை வரலாற்றிலேயே மோசமான பவுலிங் ரெக்கார்டு.. பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரௌப் சோகம்
பெங்களூர் : பாகிஸ்தான் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌப் 48 வருட உலகக்கோப்பை வரலாற்றிலேயே மோசமான சாதனையை பதிவு செய்து இருக்கிறார். அதனால், பாகிஸ்தான் ரசிகர்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் ஆட இந்தியா வந்த போது பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் உலகத் தரமானவர்கள் என அதிகம் பேசப்பட்டது.
அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரௌப் இணைந்து பந்து வீசினால் எதிரணிகள் நிலை குலைந்து போய்விடும் என்றெல்லாம் அவர்களை தூக்கி வைத்து பாகிஸ்தான் ரசிகர்கள் இணையத்தில் கூறி வந்தனர்.

ஆனால், உண்மையில் இருவருமே அந்த அளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஷஹீன் ஷா அப்ரிடியாவது ஒரு போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தினார். மொத்தம் ஒன்பது போட்டிகளில் 18 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்.
ஆனால், ஹாரிஸ் ரௌப் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. அவர் ஒவ்வொரு போட்டியிலும் ரன்களை வாரி இறைத்து பாகிஸ்தான் அணிக்கு பெரிய தலைவலியாக மட்டுமே இருந்தார். பாகிஸ்தான் அணி தன் கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடிய போட்டியில் அவர் 10 ஓவர்களில் 64 ரன்கள் கொடுத்து இருந்தார்.
2023 உலகக்கோப்பை தொடரில் மொத்தமாக ஒன்பது போட்டிகளில் அவர் 533 ரன்கள் கொடுத்துள்ளார். ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த பந்துவீச்சாளர்களில் இங்கிலாந்து அணியின் அதில் ரஷித்தை முந்தி இந்த மோசமான சாதனைப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் ஹாரிஸ் ரௌப். இந்த சாதனை மூலம் 48 ஆண்டு உலகக்கோப்பை வரலாற்றில் ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பந்துவீச்சாளர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் ஹாரிஸ் ரௌப். அதனால், தொடருக்கு முன் அவருக்கு பில்டப் கொடுத்து வந்த பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் அதிருப்தி மற்றும் கோபத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு ஹாரிஸ் ரௌப் ஒரு முக்கியமான காரணம் என கடும் விமர்சனமும் கிளம்பி உள்ளது. இந்தியா உள்ளிட்ட மற்ற நாட்டு ரசிகர்கள் ஹாரிஸ் ரௌப் உலகக்கோப்பையில் 500 ரன்கள் குவித்து விட்டார் என கிண்டல் செய்து வருகின்றனர்.
இலங்கை வேகப் பந்துவீச்சாளர் மதுசங்காவும் 500 ரன்களுக்கும் அதிகமாக ரன்களை வாரிக் கொடுத்துள்ளார். அவர் 525 ரன்கள் கொடுத்து இதே பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அதில் ரஷித் 2019 உலகக்கோப்பை தொடரில் 526 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தார். அந்த மோசமான சாதனையை ஒரு ரன்னில் தவற விட்டாலும் மதுசங்கா 2023 உலகக்கோப்பையில் 21 விக்கெட்கள் வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications