மும்பை : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய தோல்வியை தழுவி இருக்கிறது
இந்த மோசமான தோல்விக்கு காரணம் இங்கிலாந்து அணியின் உலகக்கோப்பை திட்டம் அடிப்படையில் இருந்தே தவறு என்பது தான்.
டி20 போட்டிக்கு கூட ஒத்துவராத அதிரடி ஆட்டம் ஆடும் திட்டத்தை ஒருநாள் போட்டியில் ஆட முயற்சித்தது இங்கிலாந்து அணி. அதன் காரணமாக, மோசமான இரண்டு உலகக்கோப்பை தோல்விகளை அடுத்தடுத்து சந்தித்துள்ளது அந்த அணி. அதற்கு என்ன காரணம் என ரசிகர்களும், விமர்சகர்களும் பட்டியல் போட்டு விளாசி வருகின்றனர்.
போட்டியில் என்ன நடந்தது? : இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து 399 ரன்கள் குவித்தது. இந்த சவாலான இலக்கை திட்டமிட்டு ஆடாமல், பிட்ச் எப்படி இருக்கிறது?, புதிய பந்து ஸ்விங் ஆகிறதா? யாருடைய ஓவர்களில் நிதான ஆட்டம் ஆடலாம்? யாருடைய ஓவர்களில் பவுண்டரி அடிக்கலாம்? என எதையும் சிந்திக்காமல் ஆடியது இங்கிலாந்து அணி. எந்த சூழ்நிலையிலும் அதிரடி ஆட்டம் ஆடும் திட்டத்தை செயல்படுத்தி தொடர்ந்து விக்கெட்களை இழந்தது.
விக்கெட் இழந்த போதும் சுதாரிக்காத இங்கிலாந்து வீரர்கள், அப்போதும் பவுண்டரி அடிப்பதில் தான் குறியாக இருந்தார்கள். முதல் எட்டு பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட 20 ரன்களை தாண்டவில்லை. கடைசியாக வந்த அட்கின்சன் 35, மார்க் வுட் 43 ரன்கள் குவித்தனர். இவர்கள் இருவரும் ரன் குவிக்க முக்கிய காரணம், 15 ஓவர்கள் முடிந்த பின் அவர்கள் பேட்டிங் ஆட வந்தது தான். இதை முதல் எட்டு பேட்ஸ்மேன்கள் செய்து இருக்கலாம். முதல் 15 ஓவர்கள் விக்கெட்டை காப்பற்றிக் கொண்டு, இங்கிலாந்து விக்கெட் இழக்காமல் இருந்திருந்தால் மிடில் ஓவர்களில் எளிதாக ரன் குவித்திருக்க முடியும். ஆனால், அதை செய்யவில்லை. இங்கிலாந்து அணி 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து பரிதாபமாக 229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த மோசமான தோல்விக்கான காரணம் என்ன?

அதிக அதிரடி பேட்ஸ்மேன்கள் : இங்கிலாந்து அணி கிரிக்கெட்டில் புரட்சி செய்வதாக எண்ணி டெஸ்ட், ஒருநாள் போட்டி என எல்லாவித கிரிக்கெட்டிலும் அதிரடி ஆட்டம் ஆடி ரன் குவிக்கும் பாணியை கடைபிடித்து வருகிறது. அதனால், உலகக்கோப்பை தொடருக்கு தயார் செய்யப்பட்ட இங்கிலாந்து அணியில் அதிக ஆல் - ரவுண்டர்களை சேர்த்தது. அதன் மூலம், அணியில் மொத்தம் பத்து பேட்ஸ்மேன்கள் இருப்பதை உறுதி செய்த இங்கிலாந்து அணி, அனைவருமே அதிரடி ஆட்டம் தான் ஆட வேண்டும். விக்கெட் போவதை பற்றி கவலைப்படக் கூடாது என்ற திட்டத்தையும் வகுத்தது. இந்த அணித் தேர்வால் இந்தப் போட்டியில் யாருமே நின்று ஆட முயற்சி செய்யவில்லை. வந்த உடன் விக்கெட்டை கொடுத்து செல்வதில் தான் குறியாக இருந்தனர்.
பவுண்டரி மட்டும்தான் அடிப்போம் : அடுத்து எந்த மாதிரி போட்டி சூழ்நிலை இருந்தாலும் பவுண்டரி அடித்து ரன் குவிக்க வேண்டும். சிங்கிள் ரன் ஓடி பந்துகளை வீணடிக்கக் கூடாது என்பதும் அவர்களின் திட்டத்தில் முக்கியமான அம்சம். அதை இந்தப் போட்டியிலும் செயல்படுத்திய இங்கிலாந்து அணி விக்கெட் போனாலும் தொடர்ந்து ஃபோர், சிக்ஸ் அடித்தது. அதனால், எந்த பலனும் இல்லை. மேலும், விக்கெட்கள் பறிபோனது தான் மிச்சம்.
ஒருநாள் போட்டி சூழ்நிலை : அவர்களின் அதிரடி திட்டம் டி20 போட்டிகளில் கூட செயல்படுத்துவதில் சிக்கல் உள்ளது. ஆனால், அதை ஒருநாள் போட்டி சூழ்நிலையில் செயல்படுத்துவதில் குறியாக இருந்த இங்கிலாந்து அணி, அடிப்படை கிரிக்கெட்டை மறந்து விட்டது. ஒருநாள் போட்டிகளில் இன்னிங்க்ஸ் துவங்கும் போது புதிய பந்தில் ஸ்விங் அதிகம் இருக்கும். மிடில் ஓவர்களில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும். இந்த சூழ்நிலை, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குறைவாகவும், ஆசிய கண்ட நாடுகளில் அதிகமாகவும் இருக்கும். ஆனால்,அதை கருத்தில் கொள்ளாமல், யார் ஓவர்களில் அடிக்கலாம் என திட்டமிடாமல் எந்த பவுலர் வந்தாலும் அடிப்போம் என்ற இங்கிலாந்து அணியின் திட்டம் இந்தப் போட்டியில் படுதோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
பிட்ச்சுக்கு ஏற்ற ஆட்டம் இல்லை : ஒவ்வொரு பிட்ச்சும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். மற்ற அணிகள் எல்லாம் பிட்ச்சை கணக்கில் கொண்டு ஒவ்வொரு போட்டியிலும் அணித் தேர்வையும், தங்கள் அணுகுமுறையையும் மாற்றுவார்கள். சில பிட்ச்களில் 250 ரன்கள் எடுத்தாலே போதும் என நினைப்பார்கள். சில பிட்ச்களில் 350 ரன்கள் எடுக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை 300 முதல் 500 ரன்கள் அடிக்க வேண்டும் என்பதே இலக்கு. அது எப்படிப்பட்ட பிட்ச்சாக இருந்தாலும் சரி. இந்தப் போட்டியிலும் இங்கிலாந்து வீரர்கள் 400 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் பிட்ச்சை புரிந்து கொள்ளாமல், தடுப்பாட்டம் ஆட வேண்டிய பந்துகளில் கூட ஷாட் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.
ஜெயிக்கவே முடியாது : மூளை இல்லாதவர்கள் தான் இப்படிப்பட்ட பிடிவாதமான திட்டத்தை வைத்துக் கொண்டு ஆடுவார்கள், இப்படியே ஆடினால் இங்கிலாந்து அணியால் இந்த உலகக்கோப்பை தொடரில் எந்தப் போட்டியையும் வெல்ல முடியாது என ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.