நெதர்லாந்திடம் வீரத்தை காட்டிய இங்கிலாந்து.. நானும் ரவுடி தான் என்ற ஸ்டைலில் அடி.. அந்த கனவு உறுதி
மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் நடப்பு உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பாரிஸ்டோ 15 ரன்கள், டேவிட் மாலன் 87 ரன்களிலும் ஆட்டம் இழந்தார். அந்த அணியின் அனுபவ வீரர் ஜோ ரூட் 28 ரன்களிலும், கேப்டன் பட்லர் ஐந்து ரன்களிலும், ஹாரி புரூக் 11 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இதனை அடுத்து நடுவரிசையில் களமிறங்கி தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் 84 பந்துகளில் 108 ரன்கள் விளாசினார்.
இதில் ஆறு பவுண்டரிகளும்,ஆறு சிக்ஸர்களும் அடங்கும். இறுதியில் கிறிஸ் வொகஸ் அரைச்சதம் கடக்க இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
மேக்ஸ் ஐந்து ரன்களிலும் காலன் அக்கர்மேன் டக் அவுட் ஆகியும் பெவிலியின் திரும்பினர். எனினும் மற்றொரு தொடக்க வீரர் வீஸ்லி 37 ரன்களும், சைபிராந்த் 33 ரன்களும் கேப்டன் எட்வர்ட்ஸ் 38 ரன்களும் எடுத்தனர். நடு வரிசை வீரர்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், யாரும் பெரிய ஸ்கோரை எடுக்க தவறினர். இதனால் நெதர்லாந்து அணி 37.2 ஓவரில் 179 ரன்கள் அனைத்து விக்கெட் இழந்தது.
அந்த அணியில் தேஜா நிட்மன்னரு அதிகபட்சமாக 41 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணி பந்துவீச்சு தரப்பில் மோயின் அலி, ஆதில் ரசித் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் நான்கு புள்ளிகளை பெற்றுள்ள இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications