வாயை வைத்த கம்பீர்.. சோலி முடிஞ்சுது! ஒரு சதம் கூட அடிக்காமல் இந்தியாவிலிருந்து செல்லும் பாபர் அசாம்
மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நம்பர் ஒன் வீரராக தரவரிசையில் களமிறங்கிய பாபர் அசாம் இந்த தொடரில் நினைத்ததை போல் விளையாடாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறார்.
உலகின் முன்னணி பேட்ஸ்மேன் என்ற பெயரைப் பெற்ற பாபர் அசாம், இந்திய ஆடுகளங்களில் முதல் முறையாக களமிறங்கினார். இந்த தொடரில் பாபர் அசாம் பட்டையை கிளப்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆசிய ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். மேலும் சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பாபர் அசாம் வல்லவர். இதனால் நடப்பு தொடரில் பாபர் அசாம், அதிக ரன்கள் வைப்பார் என அனைவருமே எதிர்பார்த்தனர். இதில் ஒரு படி மேல் சென்று கம்பீர் பாபர் அசாம் நடப்பு உலகக்கோப்பை தொடரில் மூன்று அல்லது நான்கு சதம் அடிப்பார் என்று கணித்தார்.
பொதுவாக கம்பீர் ஒரு விஷயத்தை பாராட்டினால் அது உருப்படாமல் போய்விடும் என்பது வரலாறு. அந்த வகையில் பாபர் அசாம், இந்த தொடரில் சிறப்பாக செயல்படுவார் என கம்பீர் தெரிவிக்க அதற்கு நேர்மாறாக பாபர் அசாம் சொதப்பினார். நடப்பு உலக கோப்பை தொடரில் 4 அரை சதம் அடித்த பாபர் அசாம் அதிகபட்சமாக 74 ரன்கள் அடித்தார். இதில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாபர் அசாம் அடித்த ஸ்கோர் 5(18), 10(15), 50(58), 18(14), 74(92), 50(65), 9(16), 66*(63) & 38(45) ஆகும். இதன் மூலம் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் பாபர் அசாம் இந்த உலகக் கோப்பையை மறக்க நினைக்கும் ஒரு தொடராக அவருக்கு இருக்கும். இந்தத் தொடரில் பாபர் அசாம் குறைந்தபட்சம் ஒரு சதம் அடித்து இருந்தால் கூட அது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும்.
ஆனால் அவர் இப்படி சொதப்புவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. மேலும் நாம் ஒருவரை பாராட்டினால் அதற்கு நேர்மாறாக தான் நடக்கும் என்பதை தெரிந்து கொண்டு கம்பீர் வேண்டுமென்றே பாபர் அசாமின் சோலியை முடித்து விட்டதாக ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள். இந்த நிலையில் பாபர் அசாம், தன்னுடைய பேட்டிங்கை கவனம் செலுத்துவதற்காக கேப்டன் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications