பெங்களூர் : இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்தியா அடுத்து ஆட உள்ள உலகக்கோப்பை போட்டியில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டார்.
அவர் கணுக்காலில் பீல்டிங் செய்த போது ஏற்பட்ட காயத்தால் அவருக்கு அவசர சிகிச்சை அளித்து வருகிறது பிசிசிஐ.

இந்திய அணி அடுத்து தரம்சாலாவில் நடைபெற உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆட உள்ளது. இந்திய வீரர்கள் தரம்சாலாவுக்கு கிளம்ப உள்ள நிலையில், பாண்டியா மட்டும் பெங்களூர் விரைந்துள்ளார். அவருக்கு அங்கே சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், பிசிசிஐ தன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டார் எனவும், இந்தியா அதன் பின் ஆட உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க அவர் லக்னோ செல்வார் எனவும் அறிவித்துள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பாண்டியாவிற்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டு அவர் அந்தப் போட்டியில் மூன்று பந்துகள் மட்டுமே வீசினார். அடுத்து அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு அதன் முடிவுகள் லண்டனை சேர்ந்த சிறப்பு மருத்துவர் ஒருவரிடம் காண்பிக்கப்பட்டது. அவரது ஆலோசனையின் படி பாண்டியாவுக்கு குறிப்பிட்ட மருந்தை ஊசி மூலமாக செலுத்த முடிவு செய்துள்ளது பிசிசிஐ.
அதற்காக அவர் பெங்களூரில் உள்ள பிசிசிஐ-இன் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு விரைந்துள்ளார். அங்கே அவருக்கு அந்த ஊசி செலுத்தப்பட உள்ளது. அவர் காயம் குணமாகும் வரை அங்கே தங்கி இருப்பார் எனவும் கூறப்படுகிறது. அதன் பின் அவர் இங்கிலாந்து போட்டிக்கு தயார் ஆவார்.
இந்த நிலையில், இந்தியா - நியூசிலாந்து போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்றாக எந்த வீரரை ஆட வைப்பது என்ற பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. முகமது ஷமி அல்லது சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்படலாம் என்ற தகவலும் கசிந்துள்ளது.
நியூசிலாந்து அணி இதுவரை நடப்பு உலகக்கோப்பை தொடரில் தோல்வியே சந்திக்காத நிலையில், அந்த வலுவான அணிக்கு எதிராக ஹர்திக் பாண்டியா ஆடாதது அணிக்கு பெரும் பின்னடைவுதான்.