பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பிரபல மாந்திரீகர் கார்த்திக் சக்ரபர்த்தியை வைத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக செய்வினை வைத்ததாக ஹரீம் ஷா என்ற நபர் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பி இருக்கிறார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையேயான 2023 உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்று இருந்தது.

இந்த நிலையில் தான் இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார் ஹரீம் ஷா என்பவர். மேலும், ஐசிசி இந்த புகாரை விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கூறி இருக்கிறார்.இந்த குற்றசாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அமித் ஷாவுக்கும் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடருக்குமான தொடர்பை புரிந்து கொள்ள வேண்டும்.
2023 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஐசிசி நடத்தும் இந்த கிரிக்கெட் தொடரை இந்தியாவில் திட்டமிட்டு நடத்தும் பொறுப்பை பகிர்ந்து கொண்டு இருக்கிறது இந்தியாவின் கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ.
தற்போது பிசிசிஐ செயலாளராக ஜெய் ஷா இருக்கிறார். அவர்தான் உலகக்கோப்பை தொடர் நடத்துவது குறித்து பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறார். இவர் நாட்டின் உள்துறை அமைச்சரான அமித் ஷாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பிசிசிஐ செயல்பாடுகளிலும், ஜெய் ஷா மீதும் அவ்வப்போது விமர்சனம் எழுந்து வருகிறது.

உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே இந்தியா - பாகிஸ்தான் போட்டி குஜராத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 155 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து இருந்த பாகிஸ்தான் அணி அடுத்து 8 விக்கெட்களை 191 ரன்கள் எடுத்து இழந்தது. இந்த சிறிய இலக்கை இந்திய அணி எளிதாக எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தான் ஹரீம் ஷா என்பவர், தனக்கு நம்பகமான இடத்தில் இருந்து கிடைத்த செய்தியின் அடிப்படையில் ஜெய் ஷா புகழ்பெற்ற மாந்திரீகர் கார்த்திக் சக்ரபர்த்தியை பணி அமர்த்தி பாகிஸ்தான் அணிக்கு எதிராக செய்வினை வைத்து விட்டதாகவும், இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரிக்க வேண்டும் எனவும் கூறி இருக்கிறார்.