புனே : வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது என எளிதாக கூறி விட்டாலும், அதன் பின்னணியில் இந்திய அணியின் திட்டங்களுக்கு எதிராக பல சம்பவங்கள் நடந்தன.
ரோஹித் சர்மா ஆறு பந்துவீச்சாளர்களை வைத்து 50 ஓவர்களை வீச திட்டமிட்டு வந்த நிலையில், திடீரென ஹர்திக் பாண்டியா தான் வீசிய முதல் ஓவரை கூட முடிக்க முடியாத நிலையில், காயம் ஏற்பட்டு வெளியேறினார்.
ஆனால், கேப்டனாக ரோஹித் சர்மா அந்த திடீர் சிக்கலை சமாளித்ததே வெற்றிக்கு முக்கிய காரணம். ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருந்ததால், 49 ஓவர்களை அவர்களை வைத்து சமாளிக்க வேண்டும். அவர்களில் நான்கு பந்துவீச்சாளர்கள் தங்களின் 10 ஓவர்களை முழுமையாக வீசியாக வேண்டும். ஒருவர் 9 ஓவர்கள் வீச வேண்டும்.
இதில் ஒருவர் ரன்களை வாரிக் கொடுத்தாலும் சிக்கல் தான். ஆனால், அதுதான் நடந்தது. ஷர்துல் தாக்குர் அதிக ரன்கள் கொடுத்தார். அந்த சிக்கலையும் சமாளித்தார் ரோஹித் சர்மா.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், பாண்டியா 9வது ஓவரை வீச வந்தார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தின் போது பீல்டிங் செய்த அவர் கணுக்காலில் அடிபட்டு வலி ஏற்பட்டது.
அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். அதன் பின் அவர் பந்து வீசவோ, பீல்டிங் செய்யவோ வரவில்லை. பாண்டியா ஓவரில் மீதமிருந்த மூன்று பந்துகளை கோலி வீசினார். இந்த நிலையில், அணியில் பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் ஷர்துல் தாக்குர் என ஐந்து வீரர்கள் மட்டுமே பந்துவீச்சாளர்கள். இவர்களை வைத்து மொத்தம் 49 ஓவர்களை சமாளிக்க வேண்டும்.
ஆனால், ரோஹித் சர்மா இந்த உலகக்கோப்பையில் வைத்திருக்கும் திட்டமே ஆறு பந்துவீச்சாளர்களை வைத்து 50 ஓவர்களை வீசுவது தான். அப்படி செய்வதில் என்ன லாபம் என்றால், ஒரு பந்துவீச்சாளர் குறிப்பிட்ட போட்டியில் சரியாக பந்து வீசவில்லை என்றால் அவருக்கு குறைவாக ஓவர்களை கொடுத்து விட்டு, மற்ற பந்துவீச்சாளர்களுக்கு அதிக ஓவர்கள் கொடுக்கலாம்.
இந்த நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோஹித்துக்கு குல்தீப் யாதவம் ஜடேஜா கை கொடுத்தனர். போட்டி நடந்த புனே ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமானது. அங்கே 300 ரன்களை கூட எளிதாக எடுக்கலாம் என்ற நிலையில், குல்தீப் யாதவ், ஜடேஜா, பும்ரா ஆகியோர் குறைவாக ரன்களை கொடுத்து, சரியான நேரத்தில் விக்கெட்களை வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டனர்.
ஆனால், ஷர்துல் தாக்குர் சில ஓவர்களில் ரன்களை வாரி வழங்கினார். அதை சமாளிப்பதே ரோஹித் சர்மாவுக்கு பெரிய தலைவலியாக இருந்தது. எனினும், முடிந்த வரை அவருக்கு மிடில் ஓவர்களில் இரண்டு, மூன்று ஓவர்களாக பிரித்து வாய்ப்பு கொடுத்து சமாளித்தார்.
எனினும், 45வது ஓவரில் தாக்குர் வீசியே ஆக வேண்டும் என்ற நிலை. அப்போது அவர் 15 ரன்கள் கொடுத்தார். பாண்டியா இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டது. ஆனால், ரோஹித் சர்மா, பந்துவீச்சாளர்களுக்கு ஓவர்களை சரியாக திட்டமிட்டு அளித்து வங்கதேசம் 300 ரன்கள் எட்டாமல் இருப்பதை உறுதி செய்தார். வங்கதேசம் 50 ஓவர்களில் 256 ரன்கள் மட்டுமே எடுத்தது.
புனே ஆடுகளத்தில் இந்த குறைவான ஸ்கோரை இந்தியா எளிதாக சேஸிங் செய்து வென்றது. மிக இக்கட்டான நிலையில் இருந்து கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட ரோஹித் சர்மா அணியை வெற்றி பெற வைத்தார் என்பதே உண்மை. அவருக்கு பும்ரா, குல்தீப் யாதவ், ஜடேஜா ஒத்துழைப்பு அளித்து பெரும் பங்காற்றினர்.